அக்.1 முதல் கட்டணங்கள் ரொக்கமாக பெறப்படாது காசோலை, வரைவோலை, ஆன்லைனில் மட்டுமே குடிநீர் வரி செலுத்த வேண்டும்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: அக்டோபர் 1ம் தேதி முதல், குடிநீர் வரி, கழிவு நீரகற்று வரி மற்றும் கட்டணங்களை இ-சேவை மையங்கள், டிஜிட்டல், காசோலை மற்றும் வரைவோலைகளாக மட்டுமே செலுத்த வேண்டும். ரொக்கமாக பெறப்பட மாட்டாது, என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி 426 சதுர கி.மீ. பரப்பு கொண்டதாகும். இதை நிர்வாக வசதிகளுக்காக 15 மண்டலங்களாகவும், 200 வார்டுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் குடிநீர் வழங்கும் சேவை மற்றும் கழிவுநீர் அகற்றும் சேவையை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, சென்னையில் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைப்புதாரர்களுக்கு குடிநீர் வாரியம் சார்பில், குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், சென்னைக்கு அருகிலுள்ள வேறு சில உள்ளாட்சி அமைப்புகளுக்கும், சில பெரிய ஆலைகளுக்கும் குடிநீர் தேவையை சென்னை குடிநீர் வாரியம் பூர்த்தி செய்கிறது. மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் வகையில், நீர்நிலைகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் பலவகைகளில் சுத்திகரிக்கப்படுகிறது. வீராணம் ஏரிக்கு அருகில் வடக்குத்து, செம்பரம்பாக்கம், புழல், சூரப்பட்டு, சென்னைக்குள் கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் பெரிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதேபோல், குடியிருப்புகள், பிற கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பது மற்றும் அதை மறுசுழற்சியில் பயன்படுத்துவது, பாதுகாப்பாக வெளியேற்றுவது ஆகிய பணிகளும் சென்னை குடிநீர் வாரியத்தின் பொறுப்பு ஆகும். சென்னையில் தற்போது, 3,529 கி.மீ. நீள குழாய்கள் மூலம் கழிவுநீரை சேகரித்து, 266 கழிவுநீரேற்று நிலையங்கள் மூலம் 12 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது.
சென்னையில் உள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்திற்கு அரையாண்டு வீதம் ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி மாதங்களில் குடிநீர் வரி, கழிவு நீரகற்று வரி செலுத்த வேண்டும்.

குறிப்பாக சொத்து வரி செலுத்துவோருக்கு ஆண்டுதோறும் சொத்து வரியில் 7 சதவீதம் குடிநீர் வரி கணக்கிடப்படுகிறது. மேலும் குடியிருப்புகளில் தண்ணீர் மீட்டர்கள் பொருத்தப்படாத வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு ரூ.164 குடிநீர் வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த குடிநீர் கட்டணத்தை உரிய தேதிக்குள் செலுத்த தவறினால், நிலுவை தொகைக்கு தாமதமாக கட்டணம் அல்லது அபராதம் வசூலிக்கப்படும். வழக்கமாக குடிநீர் வரி மற்றும் கட்டணங்கள் பொதுமக்களிம் இருந்து ரொக்கமாக பெறப்பட்டு வந்தது. இந்நிலையில், பண பரிவர்த்தனையை டிஜிட்டல்மயமாக்கும் வகையில், இனிமேல், ரொக்கமாக குடிநீர் வரி, கழிவு நீரகற்று வரி மற்றும் கட்டணம் பெறப்படாது, என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியத்திற்கு நுகர்வோர்கள் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்கள், இணைப்புக் கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்களை வரும் அக்.1ம் தேதி முதல் இ-சேவை மையங்கள், டிஜிட்டல், காசோலை, வரைவோலைகளாக மட்டுமே செலுத்திட வேண்டும். ரொக்கமாக பெறப்பட மாட்டாது. டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிப்பதற்காகவும், மக்கள் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காகவும் சென்னை குடிநீர் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

எனவே, சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி மற்றும் கட்டணங்களை காசோலை மற்றும் வரைவோலைகளாக செலுத்தும் நுகர்வோர்களின் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் பணிமனை அலுவலகங்களில் காசோலை, வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள இ-சேவை மையங்களில் குடிநீர் வரி மற்றும் கட்டணங்களை செலுத்த சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. நுகர்வோர்கள் சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டண நுழைவாயிலை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக பணம் செலுத்தலாம். யுபிஐ, கியுஆர் கோடு மற்றும் பிஒஎஸ் போன்ற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம். இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் கூறியுள்ளது.

* இணைய சேவைகள்
சென்னை குடிநீர் வாரியத்தின் (CMWSSB) இணையதளத்தில், குடிநீர் வரி மற்றும் கட்டணம் செலுத்துதல், குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி கணக்கிடுதல், தொழிற்சாலைகளுக்கு புதிய தண்ணீர் இணைப்பு வழங்குதல், தண்ணீர் டேங்கரை முன்பதிவு செய்வது, கழிவுநீர் அகற்றும் லாரியை முன்பதிவு செய்வது போன்ற இணையவழி சேவைகள் நடைமுறையில் உள்ளன.

* வசூல் மையம் மூடல்
சென்னை குடிநீர் வாரியத்தின் அனைத்து பகுதி அலுவலகங்களில் செயல்பட்டு வரும் வசூல் மையங்கள் வழக்கம் போல் இயங்கும். மேலும், பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்பட்டு வரும் வசூல் மையங்கள் அக்.1ம் தேதி முதல் செயல்படாது.

The post அக்.1 முதல் கட்டணங்கள் ரொக்கமாக பெறப்படாது காசோலை, வரைவோலை, ஆன்லைனில் மட்டுமே குடிநீர் வரி செலுத்த வேண்டும்: குடிநீர் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: