மாமல்லபுரம் அருகே பரபரப்பு தனியார் தொழிற்சாலை வேன் கவிழ்ந்து 16 பெண்கள் காயம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே தனியார் தொழிற்சாலை வேன் கவிழ்ந்த விபத்தில் 16 பெண்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் நோட்டு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, பெண்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள், தினமும் தொழிற்சாலைக்கு வேனில் சென்று வந்தனர். இந்நிலையில், நேற்று காலை இக்கம்பெனியில் பணிபுரியும் திருக்கழுக்குன்றம் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் வேனில் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

வேன், மாமல்லபுரம் அடுத்த எச்சூர் ஐயப்பன் கோயிலுக்கு அருகே சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 16 பெண்கள் மற்றும் ஓட்டுனர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்போது, இடிபாடுகளுக்குள் மாட்டிக் கொண்டு வலி தாங்க முடியாமல் பெண்கள் கூச்சலிட்டனர். அவர்களின், அலறல் சத்தம் கேட்டு எச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, அப்பகுதி மக்கள், அவ்வழியாக பயணித்த வாகன ஓட்டிகள் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை கிரேன் உதவியுடன் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து மாமல்லபுரம் மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அப்போது, திருக்கழுக்குன்றம் போலீசார் மட்டும் நேரில் வந்து பார்த்து விட்டு இது எங்கள் எல்லை இல்லை என கூறி சென்று விட்டனர். பின்னர், மாமல்லபுரம் போலீசார் வருவார்கள் என நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் வராததால், 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்து காயமடைந்த பெண்களை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, மாமல்லபுரம் போலீசாரை கேட்டால் இன்னும் எங்களுக்கு புகார்கள் வரவில்லை என முறையற்ற பதில் கூறுகின்றனர். மாமல்லபுரம் அருகே தனியார் கம்பெனிக்கு பெண்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து 16 பெண்கள் இடிபாடுகளில் சிக்கி உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மாமல்லபுரம் அருகே பரபரப்பு தனியார் தொழிற்சாலை வேன் கவிழ்ந்து 16 பெண்கள் காயம் appeared first on Dinakaran.

Related Stories: