தனியார் நிறுவனம் விற்ற போலி விதைநெல் 50 ஏக்கர் குறுவை சாகுபடி விளைச்சல் பாதிப்பு

நீடாமங்கலம், செப். 25: காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை பாசன மாவட்டமான திருவாரூர் மாவட்டம் முற்றிலும் விவசாயத்தை சார்ந்துள்ள மாவட்டமாக உள்ளது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள வேளாண்துறை இலக்கு நிர்ணயம் செய்தது.

அதற்கு ஏற்ப அரசு மூலமாகவும், அரசின் அனுமதியுடன் செயல்படும் தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் சான்று பெற்ற விதை நெல் விற்பனை செய்யப்பட்டது. இந்த விதை நெல் மூலம் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அறுவடை பணிக்கான காலம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் நீடாமங்கலம் வட்டம் ராஜப்பையன் சாவடி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் விற்பனை நெல் மற்றும் உரங்களை வாங்கி அந்த பகுதியில் சுமார் 50 ஏக்கர் அளவில் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பல்வேறு இடங்களில் அறுவடை காலம் தொடங்கி விட்டது. ஆனால் பூவனூர் கிராமத்தில் பயிரிடப்பட்ட ஏ.எஸ்.டி 16 நெல் ரகம் வயல்களில் 20 சதவீதம் மட்டுமே நெற்கதிர் வந்துள்ளன. மீதமுள்ள 80 சதவீத பகுதி விதை நெல் முளைப்பு திறன் இல்லாமல் பயிர் வீணாகியுள்ளது.

இதற்கு காரணம் தனியார் விற்பனை நிலையம், அரசு சான்று விதைகளுடன் கலப்படம் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. வேளாண் துறை அலுவலர்கள் பொறுப்பற்ற நடவடிக்கையால் குறுவை விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். போலி கலப்பட விதை நெல்லால் குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் டேவிட், ஒன்றிய தலைவர் பாரதி மோகன் தலைமையில் பாதிக்கப்பட்ட வயல்களை மாநில செயலாளர் மாசிலாமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், கலப்பட விதை நெல் விற்பனை செய்த தனியார் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கலப்பட விதைநெல்லால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

The post தனியார் நிறுவனம் விற்ற போலி விதைநெல் 50 ஏக்கர் குறுவை சாகுபடி விளைச்சல் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: