காசநோயால் பாதித்த 86 ஆயிரம் பேருக்கு உணவு பெட்டகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை:தமிழ்நாடு பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை சார்பாக திருவள்ளூர் மாவட்டம் கொள்ளுமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நேற்று மாநில அளவில் காசநோய் இல்லா தமிழ்நாடு எனும் இலக்கினை அடைய வட்டார அளவிலான ஒருங்கிணைந்த காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழாவில் கூறியதாவது:
மாநில அளவில் காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய, திருவள்ளூர் மாவட்டம் கொள்ளுமேடு நேற்று பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த காச நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் கண்டறிவதற்குரிய பரிசோதனைகள், சிகிச்சைக்கான மருந்துகள் முதுலுதவிகள் உள்ளடக்கிய அனைத்து மருத்துவ சேவைகளும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து கிடைக்கிற வகையில் ரூ20 கோடி மதிப்பீட்டில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தற்போது காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 86,000 பேர் உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ1,600 மதிப்பீட்டிலான புரதச்சத்துடன் கூடிய உணவு பெட்டகம் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 110 தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மூலமாக இந்த பெட்டகங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று காச நோய் சிகிச்சை மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதியில் உள்ள காசநோயாளிகளுக்காக மாதந்தோறும் வழங்கும் உணவு பெட்டகங்களுக்கு இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான சுதர்சனம் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும் இந்த மாவட்டம் முழுவதும் உள்ள 3000க்கும் மேற்பட்ட காச நோயாளிகளுக்கு வழங்குவதற்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் பொறுப்பேற்பதாகவும் அறிவித்துள்ளார்கள். இது மற்ற மாவட்டங்களுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமான செய்தியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post காசநோயால் பாதித்த 86 ஆயிரம் பேருக்கு உணவு பெட்டகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: