வேறொரு பெண்ணுடன் தொடர்பு செல்போனை எடுத்து பார்த்த மனைவி மீது தாக்குதல்

 

புதுச்சேரி, செப். 25: புதுச்சேரி கோரிமேடு காமராஜர் நகர் கென்னடி வீதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி விக்னேஸ்வரி (39). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சரவணனும், விக்னேஸ்வரியும் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சரவணனுக்கு திருமணத்திற்கு முன்பே குடிப்பழக்கம் இருந்துள்ளது. திருமணத்திற்கு பின்பு ஏன் குடிக்கிறாய் என்று விக்னேஸ்வரி கேட்கும்போதெல்லாம், அவரை சரவணன் அடித்துள்ளார். இதற்கிடையே சரியாக வேலைக்கு போகாமல் தொழில் துவங்க போகிறேன் என கூறி மனைவியிடம் சிறிது சிறிதாக 25 பவுன் நகைகளை வாங்கி விற்று செலவு செய்துள்ளார்.

இதுகுறித்து கேட்டதற்கும் விக்னேஸ்வரியை அடித்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் சரவணனின் செல்போனை எடுத்து சோதனை செய்தபோது, அவருக்கும் வேறு ஒரு பெண்ணிக்கும் தொடர்பு இருப்பது விக்னேஸ்வரிக்கு தெரியவந்துள்ளது. இதனை தட்டிக் கேட்ட மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சரவணன் குளித்து கொண்டிருக்கும் போது, அவரது செல்போனை விக்னேஸ்வரி மீண்டும் எடுத்து பார்த்துள்ளார். அப்போது, குளித்துவிட்டு வெளியே வந்த சரவணன் தனது செல்போனை எடுத்து பார்த்த மனைவியை, அந்த செல்போனாலேயே தாக்கியுள்ளார்.

மேலும் இது குறித்து உனது தந்தையிடம் கூறினால் அவரையும் கொலை செய்துவிடுவேன் என சரவணன் மிரட்டியுள்ளார். கணவன் தாக்கியதில் காயமடைந்த விக்னேஸ்வரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சரவணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேறொரு பெண்ணுடன் தொடர்பு செல்போனை எடுத்து பார்த்த மனைவி மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: