மதுரை, செப். 25: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மதுரை காந்தி மியூசியம் மற்றும் அரசு அருங்காட்சியகம் சார்பில் 154வது காந்தி ஜெயந்தி விழா மற்றும் உலக அமைதி நடைபயணம் ஆகியவற்றை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகள் செப்.29ம் தேதி காந்தி மியூசிய வளாகத்தில் நடக்கிறது.
இதன்படி 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ‘தேசியச் சின்னங்கள்’ எனும் தலைப்பிலும், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘உலக அமைதியும் வளர்ச்சியும்’ எனும் தலைப்பிலும் ஓவியப் போட்டி நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க நிபந்தனைகள் ஏதும் இல்லை. கல்லூரி மாணவர்களுக்கு ‘காந்திய வழியில் உணவும், உடல் நலனும்’ எனும் தலைப்பில் கட்டுரை போட்டி நடக்கிறது. இப்போட்டிகளில் பங்கேற்போர் பதிவுக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
போட்டிகளில் சிறப்பாக பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அக்.2ம் தேதி நடைபெறும் காந்தி ஜெயந்தி விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், காந்தி மியூசியத்தின் கல்வி அலுவலர் நடராஜன் 98657-91420 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று காந்தி மியூசியத்தின் செயலாளர் கே.ஆர்.நந்தாராவ் மற்றும் அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் மருதுபாண்டியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
The post காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரைப் போட்டிகள் appeared first on Dinakaran.