சிறு, குறு தொழில் வளர்ச்சி

இந்தியாவை பொறுத்தவரை தொழிற்சாலைகளின் உற்பத்தி ஒட்டுமொத்த உற்பத்தியில் 60 சதவீதம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 40 சதவீத வளர்ச்சி சிறு, குறு தொழில்களின் மூலமே கிடைத்து வருகிறது. நாட்டின் ஏற்றுமதியிலும் 40 சதவீதம் சிறு, குறு தொழில்களின் உற்பத்தி முக்கிய பங்காற்றுவதோடு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் சிறு, குறு தொழில்களே கொடுக்கின்றன. சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஏராளம். இத்தொழில்கள் சார்ந்த புத்தாக்க திட்டத்திற்கு தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கி வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சேலம், ஓசூர், கடலூர் உள்ளிட்ட 4 இடங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 6 தொழிற்பேட்டைகள் உள்ள நிலையில், மேலும் 6 தொழிற்பேட்டைகளை உருவாக்கிட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் அதற்கான மின் கட்டணங்களும் முக்கிய பங்காற்றுகின்றன. சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மின் கட்டண முறைகளை தற்போது மாற்றியமைத்துள்ளது. அதன்படி தொழிற்சாலைகளுக்கு 50 கிலோவாட் வரை உத்தேசித்திருந்த நிலையான கட்டணத்தை மாதம் ரூ.100லிருந்து ரூ.75 ஆகவும், 50 கிலோவாட்டுக்கு மேல் 100 கிலோவாட் வரையிலான நிலைக்கட்டணத்தை ரூ.325லிருந்து ரூ.150 ஆகவும், 100 கிலோவாட் முதல் 112 கிலோவாட் வரையிலான நிலைக்கட்டணத்தை ரூ.500லிருந்து ரூ.150 ஆகவும் குறைத்து மாற்றியமைத்துள்ளனர்.

மேலும் தொழிற்சாலைகளுக்கான உச்சநேர நுகர்வு மின்கட்டணம் 25 சதவீதத்திலிருந்து 15 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறைக்கப்பட்ட மின் கட்டணங்களுக்காக கூடுதல் மானியமாக ரூ.145 கோடி நிதியை தமிழக அரசு வழங்க உள்ளது. இதனால் 3.57 லட்சம் தொழிற்சாலை நுகர்வோர் பயனாளிகளாக மாறுவர். தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் மாத நுகர்வோர் விலை குறியீடுகளின்படி 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இருப்பினும் தொழில்துறையினர் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்திலும், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இத்தகைய சலுகைகளை அரசு அளித்துள்ளது. கட்டண உயர்வை 4.7 சதவீதத்தில் இருந்து 2.18 சதவீதமாக குறைத்து, தொழில் நிறுவனங்களின் சுமையை அரசு வெகுவாக குறைத்துள்ளது.

ஜவுளி தொழிலின் வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து விளங்கிடவும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஏராளம். அந்த வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் கோரிக்கைகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்நிறுவனங்களுக்கு தேவையான சலுகைகளை வழங்கி தொழில் துறையில் புரட்சிக்கு வித்திடுகிறது. பருவகால தேவைக்கேற்ப மாறும் தன்மை கொண்ட மின் தேவைகளில் சலுகைகள் வழங்கும்போது தொழில் உற்பத்தி தானாகவே கூடும். மேலும் தொழிற்சாலைகளுக்கான நிலைக்கட்டணத்தை குறைக்கும்போது தொழில் முனைவோருக்கும் சிரமங்கள் குறையும். தமிழக அரசின் சமீபகால நடவடிக்கைகள் இந்திய அளவில் தொழில்துறையில் தமிழகம் பிரகாசிக்க வழிவகுப்பதாக உள்ளது.

The post சிறு, குறு தொழில் வளர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: