பணிச்சுமை, மன அழுத்தத்தில் போலீசார் தமிழ்நாடு காவல்துறையின் கவுரவத்தை மீட்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேச்சு

நாகர்கோவில்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்க மாநில மாநாடு நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் ஓய்வு பெற்ற எஸ்.பி. குணசேகரன் தலைமை வகித்தார். மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசியதாவது : காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு பராமரிக்கவும், மக்கள் நலன் காக்கவும் தங்களை அர்ப்பணித்து கொண்டு பணியாற்றுகிறார்கள். காவல்துறையினரை பணி ஓய்வு பெற்றவர்கள் என கூற முடியாது. பணி நிறைவு பெற்றவர்கள் என கூற வேண்டும். காவல்துறையினருக்கு பணிச்சுமை உள்ளது. பண்டிகை நாட்கள் என்றாலும், வீட்டில் விசேஷ நிகழ்ச்சிகள் என்றாலும் கூட போலீசார் ஒரு வித மன அழுத்தத்தில் தான் குடும்பத்தினருடன் இருக்க வேண்டி உள்ளது. தற்போது காவல்துறையினருக்கு அதிக பணிச்சுமை வந்து விட்டது.

இது மேலும் அவர்களை மன சோர்வடைய செய்துள்ளது. அந்த கால காவல்துறையினர் போல் இப்போது இல்லை. தமிழ்நாடு காவல்துறையின் கவுரவத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு பணி நிறைவு பெற்ற போலீசாரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். என்னை பொறுத்தவரை பணி நிறைவு பெற்றவர்களுக்கு சங்கம் என்பதை விட, பணியில் உள்ளவர்களுக்கு சங்கம் அமைக்க வேண்டும் என போராடியவர்கள் உண்டு. வெறும் சங்கம் என்று இல்லாமல், சமூக சேவையில் முழுமையாக ஈடுபட வேண்டும். குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பயிற்சி மையங்களை தொடங்கி, காவல்துறையை சேர்ந்தவர்களின் குழந்தைகள் மட்டுமின்றி ஏழை மாணவ, மாணவிகள் அனைவர் வாழ்வும் உயர உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post பணிச்சுமை, மன அழுத்தத்தில் போலீசார் தமிழ்நாடு காவல்துறையின் கவுரவத்தை மீட்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: