செய்யாறு அருகே அனக்காவூர் கிராமத்தில் பாண்டியர் கால ஆநிரை காத்த நடுகல் கண்டெடுப்பு

*கி.பி.12ம் நூற்றாண்டை சேர்ந்தது

செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அனக்காவூர் கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கிருந்த நடுகல் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நடுத்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, அந்த நடுகல்லை எடுத்து எதிரே கிழக்கு பகுதியில் சாலையோரம் வைத்து பரசுராமராக மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த நடுகல் கி.பி.12ம் நூற்றாண்டை சேர்ந்த ஆநிரை காத்த பாண்டியர் கால அரியவகை நடுகல் என வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் ஆர்வலருமான எறும்பூர் கை.செல்வகுமார் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: விலங்குகளுடன் போரிட்டு இறந்த வீரனுக்காக வரையப்பட்ட ஓவியங்கள் தொன்மை வாய்ந்ததாகும். பெருங்கற்காலம் தொடங்கி இறந்தவர்களுக்கு நினைவு கற்கள் எடுக்கப்பட்டாலும், போரில் இறந்தவர்களுக்கு வைக்கப்படும் கல்லே வீரக்கல் என்றும் நடுக்கல் என்றும் அழைப்பர். அந்த வகையில் இங்கு கண்டெடுக்கப்பட்ட நடுகல் ஆநிரை காத்தபோது(விலங்குகளுடன் போராடி கால்நடைகளை காப்பது) இறந்த ஒருவரின் நடுகல் என்று உறுதியாக கூறலாம். இக்கல்லின் மொத்த நீளம் 90 செ.மீ உள்ளது. அதாவது தரையில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் நடுகல் சிற்பத்தின் உயரம் 15 செ.மீ, அகலம் 9 செ.மீ ஆகும்.

வலக்கையில் நீண்ட குறுவால் ஏந்தியும், இடக்கையில் ஏதோ வைத்திருப்பதுபோன்றும் தெரிகிறது. ஆனால் தெளிவாக தெரியவில்லை. வீரன் மிடுக்காக அமர்ந்த நிலையில் கம்பீர தலப்பாகையுடன் விரிந்த மார்புடன் அமர்ந்து இருப்பதுபோல செதுக்கப்பட்டுள்ளது. ஆநிரை காத்து இறந்த வீரத்தை போற்றும் வகையில் எடுக்கப்பட்ட நடுக்கல் ஆகும். இவை கி.பி.12ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் காலத்தை ஒத்து காணப்படுகிறது.

அனக்காவூர் கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சிலையை பரசுராமராக நினைத்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் விழாக்காலங்களிலும், வேண்டுதலை நிறைவேற்ற பிற நாட்களிலும் இச்சிலையின் முன் ஆடு, கோழி போன்றவற்றை பலியிடுவததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
செய்யாறு பகுதியில் பாண்டியர் கால ஆநிரை காத்து இறந்த ஒருவரின் வீரத்தை போற்றும் வகையில் நடுகல் கண்டெடுத்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருத முடிகிறது. நடுகற்கள் பெரும்பாலும் ஊரின் புறத்தே காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post செய்யாறு அருகே அனக்காவூர் கிராமத்தில் பாண்டியர் கால ஆநிரை காத்த நடுகல் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: