செங்கல்பட்டில் பலத்த மழை காரணமாக மரம் முறிந்து மின் கம்பி அறுந்ததால் பாதியில் ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே தண்டவாளப் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பி அறுந்ததது. இதனால், சென்னை செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் பாதியில் நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. அப்பகுதிகளில் உள்ள மரங்கள் திடீரென முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. இதனால், ரயில் மற்றும் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம் அருகே ஒத்திவாக்கம்-கருநீலம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பகுதியில் நேற்று அதிகாலை பலத்த மழை காரணமாக ஒரு மரம் வேரோடு, அங்குள்ள உயர் அழுத்த மின் கம்பியின்மீது சாய்ந்தது.

இதில், மின்கம்பி அறுந்து போனதால், அவ்வழியே சென்னை வரும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதேபோல் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி நேற்று காலை வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், செங்கல்பட்டு அருகே தண்டவாளப் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததால் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது. இதனால், அந்த ரயிலில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம், மாம்பலம் எழும்பூர் வரை வேலைக்கு செல்லும் பலர் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். பின்னர், மரத்தை அறுத்து எடுத்து, மின் கம்பிகள் சரி செய்யப்பட்ட பின்னர் ரயில்கள் புறப்பட்டு சென்றன.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறும்போது, ‘‘செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் விடிய விடிய பலத்த மழை பெய்தது. மேலும், மதுராந்தகம் அருகே கருநீலம்-ஒத்திவாக்கம் ரயில்நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பகுதியில் ஒரு மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பி அறுந்து சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்பட சென்னை நோக்கி வந்த அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர் ரயில்வே ஊழியர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி, மின்கம்பி மற்றும் சிக்னல் கோளாறுகளை சீரமைத்தனர். பின்னர், ரயில் போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது,’’ என்று தெரிவித்தனர்.

The post செங்கல்பட்டில் பலத்த மழை காரணமாக மரம் முறிந்து மின் கம்பி அறுந்ததால் பாதியில் ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: