நீட் விவகாரத்தில் ஒன்றிய அரசின் சூழ்ச்சி அம்பலமாகியுள்ளது: கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: நீட் விவகாரத்தில் ஒன்றிய அரசின் சூழ்ச்சி அம்பலமாகியுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என ஒன்றிய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது, இது, நீட் தேர்வின் சூழ்ச்சியை அம்பலமாக்கியுள்ளது. தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு, நீட் தேர்வை எழுதினாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்றால், அந்த தேர்வை ஏன் நடத்த வேண்டும் என்பதுதான் மாணவர்கள்-பெற்றோர்களின் கேள்வியாக இருக்கிறது. தனியார் பயிற்சி மையங்களையும் தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் வளப்படுத்துவதற்கான ஏற்பாடுதான் நீட் தேர்வு என்று திமுக ஆரம்பம் முதல் கூறி வந்தது இன்றைக்கு உண்மையாகியுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக இருந்தாலும் எம்.டி, எம்.எஸ். படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று ஒன்றிய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்திருக்கிறது. தற்போது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவித்திருப்பதன் மூலம் நீட் முடிவு தேர்வு வெறும் கண்துடைப்பு என்பது வெள்ளிடை மலையாக தெரிகிறது.

பா.ம.க. தலைவர் அன்புமணி: நடப்பாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வில் 30 பேர் ஒற்றை இலக்கத்திலும், 14 பேர் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், 13 எதிர்மறை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தமிழக அரசின் கல்வி நிறுவனங்களில் ஆண்டு கல்விக் கட்டணமே ரூ.20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை தான். ஆனால், தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கல்விக்கட்டணம் ரூ.40 லட்சத்துக்கும் அதிகம் ஆகும். இந்த அளவு கல்விக்கட்டணத்தை செலுத்துவது இதுவரை தகுதி பெற்ற மாணவர்களால் சாத்தியமில்லை என்பதால் தான், 8000 இடங்கள் நிரம்பவில்லை. இப்போது அந்தக் கட்டணத்தை செலுத்தும் அளவுக்கு புதிய போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கவே தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டு 80,000 பேருக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது சமூக அநீதி ஆகும். எனவே, மருத்துவப் படிப்புக்கான அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக்: நடப்பாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் சேரலாம் என்கிற அறிவிப்பு மக்களை முட்டாளாக்கும் ஒன்றாகும். மொத்தமுள்ள 45 ஆயிரம் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கு நீட் தேர்வில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வெற்றிபெற்று தகுதிபெற்றுள்ள நிலையில், பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தகுதி பெற்றவர்கள் என்றால் பின்னர் நீட் தேர்வு எதற்கு என்கிற கேள்வி எழுகின்றது. இதன்மூலம் நீட் தேர்வு மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தாது என்பதும், உயர் கல்வியில் சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை வடிகட்டும் செயல்முறை என்பதும் தெளிவாகின்றது. நீட் ஆதரவாளர்கள் கூறுவது போன்று மருத்துவக் கல்வியின் தரம் அதிகரிக்கும்.

The post நீட் விவகாரத்தில் ஒன்றிய அரசின் சூழ்ச்சி அம்பலமாகியுள்ளது: கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: