வரகு பயிரிட்டால் அதிக வருமானம்; வேளாண்துறை டிப்ஸ்

சிவகாசி, செப்.21: வரகு பயிரிடும் விவசாயிகளுக்கு கோ 3, ஏ.பி.கே 1 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். மரக்கலப்பை கொண்டு 2 முறை நன்கு ஆழமாக உழுது நிலத்தை சமன் செய்ய வேண்டும். அசோஸ்பைரில்லம் 600 கிராம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 600 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்து பின், விதைப்பு செய்ய வேண்டும். கை விதைப்பு முறைக்கு ஹெக்டேருக்கு 12.5 கிலோ விதை பயன்படுத்த வேண்டும். விதைப்பான் கொண்டு வரிசை விதைப்பு செய்தால் ஹெக்டேருக்கு 10 கிலோ விதை பயன்படுத்த வேண்டும்.

வரிசைக்கு வரிசை 22.5 சென்டிமீட்டர் 10 சென்டிமீட்டர் இடைவெளியும் இருக்க வேண்டும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 12.5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பி, பின் உழ வேண்டும். தொழு உரத்துடன் 10 பொட்டலங்கள் அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலங்கள் பாஸ்ப்போபாக்டீரியா ஆகிய நன்மை தரும் உயிர் உரங்களை சேர்த்து இடலாம். ஹெக்டேருக்கு முறையே 44:22 கிலோ தழை மற்றும் மணிச்சத்துக்களை இட வேண்டும். பயிர் விதைத்த 15ம் நாள் ஒரு முறையும், 40 நாள் ஒரு முறையும் கைக் களை எடுக்க வேண்டும்.

களை எடுத்தவுடன் வரிசைக்கு வரிசை 22.5 சென்டிமீட்டர் மற்றும் செடிக்கு செடி 10 சென்டிமீட்டர் இடைவெளியில் பயிர்களை களைக்க வேண்டும். விதையின் மூலம் கதிர்கரிப்பூ நோயை தடுக்க ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் மேன்கோசெப் (அ) குளோரோதலோனிலை கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். நோய் எதிர்ப்பு ரகமான கோ 3ஐ பயிரிடலாம். கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்து தானியங்களை பிரித்தெடுக்க வேண்டும். அதன்பிறகு இவற்றை நன்றாக காயவைத்து, சுத்தம் செய்து சேமித்து வைக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விபரங்களை பெற விவசாயிகள் அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர் அலுவலகத்தை அணுகலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post வரகு பயிரிட்டால் அதிக வருமானம்; வேளாண்துறை டிப்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: