நூறு ஏக்கரில் திறந்தும் ஒன்றிய அரசு பாராமுகம் வாசனை பயிர் தொழில் பூங்கா ‘வாசமின்றி’ முடங்கிய பரிதாபம்: முழுமையாக செயல்பட்டால் ஏற்றுமதி வணிகம் மூலம் ரூ.1,500 கோடி வருவாய் கிடைக்கும்

* சிறப்பு செய்தி
ஒன்றிய அரசின் வர்த்தகத்துறை சார்பில் இந்தியா முழுவதும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட 7 இடங்களில் ஏற்கனவே ‘ஸ்பைசஸ் பார்க்’ செயல்பட்டு வருகிறது. எட்டாவதாக சிவகங்கை அருகே கொட்டகுடியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் ‘ஸ்பைசஸ் பார்க்’ கடந்த 2013ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதில் 40 பிளாட்கள் அமைக்கப்பட்டன. வாசனை பயிர்களான மிளகாய், மல்லி, மஞ்சள், இஞ்சி, பெருங்காயம் முதலியவற்றை மதிப்பு கூட்டி, நவீன இயந்திரங்கள் மூலம் பேக்கிங் செய்து வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் இப்பூங்கா அமைக்கப்பட்டது.

இங்கு தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கி கடனுதவி மற்றும் ஒன்றிய அரசின் 33 சதவீத மானியம் கிடைக்கும். பூங்கா முழுமையாக செயல்படும் நிலையில் ஏற்றுமதி வணிகம் மூலம் ரூ.1,500 கோடி வருவாயும், சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மிளகாய் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த சிவகங்கை மாவட்டத்தில் மீண்டும் மிளகாய் உற்பத்தியை பெருக்கும் வகையில் இப்பூங்காவை அப்போதைய ஒன்றிய அரசு அமைத்தது.

மிளகாய் உற்பத்தி செய்யும் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், வாசனை பொருட்களை இங்கு கொண்டுவந்து அரைத்து ஏற்றுமதி செய்யும் வகையில் இந்த ஸ்பைசஸ் பூங்கா அமைக்கப்பட்டது. மேலும் ஈரோடு பகுதியில் இருந்து மஞ்சள், ஆந்திர மாநில மிளகாய்களும் இங்கு கொண்டு வரப்பட்டு அரைத்து ஏற்றுமதி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால் ஸ்பைசஸ் பார்க் இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் அதன் பிறகு வந்த ஒன்றிய அரசு இந்த திட்டத்தை கண்டுகொள்ளவில்லை.

மாநில அரசும் தேவையான முயற்சிகளை எடுக்கவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்பைசஸ் பூங்காவில் உள்ள கட்டிடங்களுக்கு மாநில அரசின் நகர் ஊரமைப்பு இயக்குநரகத்தின் சார்பிலான கட்டிட அனுமதி கூட வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. 2016ம் ஆண்டு 5 பேர் கொண்ட அப்போதைய அதிமுக எம்பிக்கள் குழுவினர் இங்கு ஆய்வு நடத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததன் அடிப்படையில் அனுமதி கிடைத்தது.

இதையடுத்து முதன் முறையாக தனியார் நிறுவன உற்பத்தி கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. 40 பிளாட்களில் பெரும்பாலானவை தனியாரிடம் கொடுக்கும் பணி முடிவடைந்துள்ளது. ஆனால் அவர்கள் நிறுவனம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கவில்லை. ஒன்றிய அரசு சார்பில் அதற்கான காலக்கெடு எதுவும் விதிக்கப்படாததால் தொடர்ந்து இழுபறி நிலையே நீடிக்கிறது. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட இயந்திரங்களே உள்ளன. அவைகளும் முழுமையாக பயன்படுத்தப்படாததால் தற்போதைய அதன் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

மேலும் தற்போது அரைத்தல், பதப்படுத்தல், பேக்கிங் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு நவீன இயந்திரங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தும் நிலையில், அதுபோன்ற இயந்திரங்களை இங்கும் நிறுவ வேண்டும். இடத்தை மட்டும் கொடுத்து தனியாரே நிறுவன கட்டுமானப்பணிகளை செய்யும் வகையில் திட்டம் உள்ளதாலும் தொடர்ந்து இத்திட்டம் பின்னடைவில் உள்ளது. எனவே ஒன்றிய அரசு சார்பில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து புதிய இயந்திரங்கள் நிறுவுவது, நிறுவன கட்டுமானப்பணிகள் செய்யும் திட்டத்தில் மாற்றம் செய்வது, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பொருட்களை வரவழைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவைகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வர்த்தகர்கள் கூறுகையில், ‘‘இப்பூங்கா அமைக்கப்பட்டதன் நோக்கமே வறட்சி மாவட்டங்களான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள், வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டுதான். விவசாயிகள், வர்த்தகர்கள் இங்குள்ள பிளாட்களை குத்தகைக்கு எடுக்கும் வகையில்தான் பூங்கா அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என கருதப்பட்டது. ஆனால் பூங்கா செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு எவ்வித பயனும் இல்லாமல் உள்ளது. இதனால் இத்திட்டமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகள் சென்றால் இந்த பூங்காவினால் எவ்வித பயன்பாடும் இல்லை என முழுமையாக முடக்கப்படும். எனவே அவ்வாறு இல்லாமல் முந்தைய ஒன்றிய அரசின் திட்டப்படியே தொழில் பூங்காவை செயல்படுத்த வேண்டும்’’ என்றனர்.

* ‘2 மாதங்களில் பணிகள் தொடங்க நடவடிக்கை’
ஸ்பைசஸ் மேலாளர் போஸ் கூறும்போது, ‘‘கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்பைசஸ் பார்க்கை செயல்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டதன் அடிப்படையில் தான் 40 பிளாட்களில் பெரும்பாலான பிளாட்கள் தொழில் நிறுவனம் தொடங்க உள்ளவர்களுக்கு பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பணிகளை விரைந்து தொடங்க அறிவுறுத்தி வருகிறோம். இன்னும் இரண்டு மாதங்களில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கட்டிடங்கள், இயந்திரங்களை பாதிப்பு ஏற்படாதவாறு பராமரித்து வருகிறோம்’’ என்றார்.

The post நூறு ஏக்கரில் திறந்தும் ஒன்றிய அரசு பாராமுகம் வாசனை பயிர் தொழில் பூங்கா ‘வாசமின்றி’ முடங்கிய பரிதாபம்: முழுமையாக செயல்பட்டால் ஏற்றுமதி வணிகம் மூலம் ரூ.1,500 கோடி வருவாய் கிடைக்கும் appeared first on Dinakaran.

Related Stories: