ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி தொடர் 8வது முறையாக இந்தியா சாம்பியன்: 50 ரன்னில் சுருண்டது இலங்கை

* சிராஜ் துல்லிய தாக்குதல் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

கொழும்பு: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில், நடப்பு சாம்பியன் இலங்கை அணியை 50 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா 8வது முறையாக பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. ஐசிசி உலக கோப்பை போட்டிக்கு முன்னோட்டமாக அமைந்த 16வது ஆசிய கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் நேற்று மோதின. கொழும்பு, ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் காயம் காரணமாக விலகிய தீக்‌ஷனாவுக்கு பதிலாக துஷான் ஹேமந்தா சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் மொத்தம் 6 மாற்றங்கள் செய்யப்பட்டன. அக்சர் படேலுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட கோஹ்லி, ஹர்திக் உள்பட முன்னணி வீரர்களும் பைனலில் களமிறங்கினர். பதும் நிசங்கா, குசால் பெரேரா இணைந்து இலங்கை இன்னிங்சை தொடங்கினர்.

பும்ரா வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் குசால் பெரேரா டக் அவுட்டானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே, சிராஜ் வீசிய 4வது ஓவர் இலங்கை அணியை சுனாமியாக தாக்கி சுருட்டி வீசியது. அந்த ஓவரில் நிசங்கா (2), சமரவிக்ரமா (0), அசலங்கா (0), தனஞ்ஜெயா டி சில்வா (4) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுக்க… இலங்கை 4 ஓவரில் 12 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து அதலபாதாளத்தில் வீழ்ந்தது. சிராஜின் துல்லிய தாக்குதலை சமாளிக்க முடியாமல் கேப்டன் தசுன் ஷனகாவும் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, இலங்கை 12/6 என பரிதாபமான நிலையை எட்டியது. குசால் மெண்டிஸ் 17 ரன் எடுத்து சிராஜ் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற நடையை கட்ட, வெல்லாலகே (0), மதுஷான் (1), பதிரணா (0) ஆகியோர் ஹர்திக் பாண்டியா வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

15.2 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி 50 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. துஷான் ஹேமந்தா 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் சிராஜ் 7 ஓவரில் 1 மெய்டன் உள்பட 21 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். ஹர்திக் 3, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 51 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இஷான் கிஷன், ஷுப்மன் கில் இணைந்து துரத்தலை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 6.1 ஓவரில் 51 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தியது. இஷான் 23 ரன் (18 பந்து, 3 பவுண்டரி), கில் 27 ரன்னுடன் (19 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 263 பந்துகளை மீதம் வைத்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வசப்படுத்திய இந்தியா 8வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இதில் 7 முறை ஒருநாள் போட்டித் தொடர் என்பதும், ஒரு தொடர் டி20 அடிப்படையிலானது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகனாக முகமது சிராஜ், தொடர் நாயகனாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டனர். சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த வெற்றியை, நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

The post ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி தொடர் 8வது முறையாக இந்தியா சாம்பியன்: 50 ரன்னில் சுருண்டது இலங்கை appeared first on Dinakaran.

Related Stories: