திருச்சுழி அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததால் பரபரப்பு: 13 பேர் படுகாயம்

 

திருச்சுழி, செப்.16: திருச்சுழி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் படுகாயமடைந்தனர். அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு தனியார் பேருந்து மானாமதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தை வீரசோழனை சேர்ந்த சண்முகநாதன் ஓட்டி சென்றார். பேருந்து திருச்சுழி அருகே தமிழ்பாடி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வேகமாக வந்த சிமெண்ட் லாரி முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. இதைப் பார்த்த பேருந்து ஓட்டுநர் லாரியின் மீது மோதாமல் இருப்பதற்காக சாலை ஓரத்தில் பேருந்தை ஒதுக்கினார். அப்போது பேருந்து நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த தமிழ்பாடியை சேர்ந்த இருளன் மனைவி முருகேஸ்வரி(24), விருதுநகர் மாடசாமி மனைவி பாண்டியம்மாள்(65), ராமலிங்கம் மனைவி தமிழ்ச்செல்வி(36), நரிக்குடி பெரியசாமி மனைவி முத்து கருப்பன், திருச்சுழி சின்னத்தம்பி மனைவி பாதம் பிரியா(45) உள்பட 13 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருச்சுழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருச்சுழி அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததால் பரபரப்பு: 13 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: