‘ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் இல்லையாம்… கூடுதல் செலவாம்…’ சிஏஜி அமைப்பு கண்காணிப்பு நாய்: அண்ணாமலை சர்ச்சை

கொடைக்கானல்: சிஏஜி வெளியிட்ட ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் இல்லை ; கூடுதல் செலவு. சிஏஜி அமைப்பு கண்காணிப்பு நாய் என்று அண்ணாமலை தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: ஜி 20 மாநாட்டிற்காக மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது தவறு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் 7 திட்டங்களில் ஊழல் நடந்திருப்பதாக கூறி இருப்பது தவறு. ஏழு திட்டங்களிலும் ஊழல் நடைபெறவில்லை. ரூ.7,50,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை கொடுத்துள்ளது பற்றி முதல்வர் பேசியுள்ளார். சிஏஜி அமைப்பு என்பது வாட்ச் டாக். அதாவது கண்காணிப்பு நாய் மட்டுமே. திட்டங்களில் கூடுதலாக செலவு செய்யப்பட்டிருப்பது உண்மைதான்.

குறிப்பாக நெடுஞ்சாலை பணிகளில் இந்த அளவு தொகை செலவு செய்யப்பட்டிருப்பது அந்த திட்டத்தின் விரிவாக்கமாக இருக்கலாம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தற்போதைக்கு சாத்தியமல்ல. ஆய்வுக்குழுவின் அறிக்கைக்கு பின்னரே அதுகுறித்து முடிவு செய்யப்படும். ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி பிரச்னையில் அவர் மீது எந்த குற்றமும் சொல்ல முடியாது. அதன் ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்பி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். இவ்வாறு கூறினார்.

‘நாக்கை வெட்டுவேன்’ என ஒன்றிய அமைச்சர் கூறியது தவறு: அண்ணாமலை கூறுகையில், ‘‘சனாதனம் பற்றி விமர்சிப்பவர்களின் நாக்கை வெட்டுவேன் என்று ஒன்றிய அமைச்சர் சொல்லி இருப்பது தவறுதான். சனாதன தர்மப்படி அனைவரும் சமம். இப்படி பேசுபவர்கள் சனாதனத்திற்கு எதிரானவர்கள் தான். உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டுவேன் என்று சொன்னவரும் போலி சாமியார் தான். அகிம்சையை விரும்புபவர்கள் தான் சனாதனவாதிகள். எச்.ராஜா காவல்துறையின் யூனிபார்மை காவி கலராக மாற்றுவேன் என்று எந்த சூழலில் சொன்னார் என்று தெரியாது. காக்கி யூனிபார்ம் என்பது பாகுபாட்டை உணர்த்துவதாக இல்லாமல் இருப்பதற்காக தான் ஏற்படுத்தப்பட்டது’’ என்றார்.

The post ‘ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் இல்லையாம்… கூடுதல் செலவாம்…’ சிஏஜி அமைப்பு கண்காணிப்பு நாய்: அண்ணாமலை சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: