அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றிய பகுதிகளில் 363 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்: அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

புதுக்கோட்டை, செப்.12: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்மெய்யநாதன் நேற்று வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கிடவும், பள்ளிக்கு நாள்தோறும் உரிய நேரத்திற்கு சென்று வருவதற்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்றையதினம் அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், பூவைமாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 31 மாணவர்கள், 31 மாணவிகள், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 25 மாணவர்கள், 28 மாணவிகள், கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 122 மாணவர்கள், கொத்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 126 மாணவிகள் என ஆக மொத்தம் 363 மாணவ, மாணவிகளுக்கு ரூ.17,52,800 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் தமிழக அரசால் வழங்கப்படும் இத்தகைய மிதிவண்டிகளை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் பள்ளிக்கு சரியான நேரத்திற்குள் சென்றுவருவதுடன், உடற்பயிற்சியாகவும் அமைகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார். நிகழ்ச்சிகளில், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட கல்வி அலுவலர் (அறந்தாங்கி).ராஜேஸ்வரி, அறந்தாங்கி பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர்.
இளையராஜா, தாசில்தார் பாலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றிய பகுதிகளில் 363 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்: அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: