புதுக்கோட்டை, செப்.11: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குன்னக்குரும்பி கிராமம் மற்றும் கந்தர்வகோட்டை அருகே உள்ள வழியம்பட்டி கிராமம் என இரு வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அரசு மதுபான கடைக்கு எதிராக கலெக்டர் மெர்சி ரம்யாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த குன்னக்குரும்பி கிராமத்தில் பல ஆண்டுகளாக அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையினால் அப்பகுதியில் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், பொதுமக்கள் பெண்கள் என பெரும் துயரம் அடைந்து வருவதாகவும் அரசு மதுபானக் கடையில் மதுவை குடித்துவிட்டு சாலையில் படுத்து கொள்வது தனியாக பள்ளிக்குச் செல்லும் பெண்களிடம் பிரச்னை செய்வது போன்ற சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மேலும் நான்கு மாதங்களாக மூடப்பட்டு இருந்த அரசு மதுபான கடை மீண்டும் திறக்கப்பட்டு தற்பொழுது செயல்பட்டு வருவதால் பெரும் துயரம் ஏற்பட்டு வருவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வழியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கிராமத்தில் குமரப்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும். இந்த பேருந்து நிலையத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். மதுபான கடையில் மதுவை அருந்தி விட்டு வரும் குடிமகன்கள் பள்ளி மாணவ மாணவிகளிடம் சில்மிஷம் செய்வதும் பெண்களுக்கு இடையூறு செய்வது போன்ற பல்வேறு செயல்களில் மது பிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
உடனடியாக பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையை அகற்றுவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அந்த பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். ஒரே நாளில் இருவேறு கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறி கலெக்டர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
The post அறந்தாங்கி, கந்தர்வகோட்டை பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்: கிராம பெண்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.
