பெருங்குடி குப்பை கிடங்கு கழிவுகளால் மாசு ராம்சார் அங்கீகாரத்தை மீட்குமா பள்ளிக்கரணை சதுப்புநிலம்? கழிவுகளை அகற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம் பராமரிப்பு மற்றும் சுற்றுச்சுழல் மாசற்ற நிலமாக மாநில அரசு பராமரிக்கப்பட்டது. இதனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு ‘ராம்சார்’ அங்கீகாரம் ஓராண்டிற்கு முன்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், ராம்சர் என்கிற அந்தஸ்த்தை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தக்க ைவக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம், சதுப்பு நிலத்தில் குப்பைகள், கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், ராம்சர் அங்கீகாரம் பள்ளிக்கரணை ஏரி தக்க வைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் சாயக்கழிவுகளால் பள்ளிகரணை சதுப்பு நிலம் ராம்சர் அடையாளத்தை இழந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல, சதுப்பு நிலம் என்கிற நிலையை பள்ளிகரணை இழந்துவருதாக கூறப்படும் நிலையில், சர்வதேச அளவில் மாண்ட்ரிக் பதிவில் சதுப்பு நில அந்தஸ்தை கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக ஒடிசாவில் உள்ள சிலிகா ஏரி, மணிப்பூரில் உள்ள லோக்டாக் ஏரி போன்றவை சரியான பராமரிப்பு இல்லாமலும், முறையாக தூர்வாராமலும், இந்த காரணத்திற்காக மாண்ட்ரீக் பதிவில் சேர்க்கப்பட்டு ராம்சர் அங்கீகாரத்தை இழந்தன. இந்த நிகழ்வுகளை அடுத்துதான், சில மாநிலங்கள் சதுப்பு நிலங்களை காக்கும் முயற்சியில் இறங்கின.

அந்தவகையில் சென்னையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும் அதனை தடுக்கும் ஒரு தூண்போல பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இருந்தது. குறிப்பாக, 1965ம் ஆண்டு 5,500 ஹெக்டர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த பள்ளிக்கரணை ஆக்ரமிப்புகளால் தற்போது 550 ஹெக்டர் அளவிற்கு சுருங்கி விட்டது. இதில் பெருங்குடி குப்பை கிடங்கை தவிர, தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், காற்றாலை ஆற்றல் தொழில்நுட்ப மையம், தனியார் கட்டிடங்கள், குடியிருப்புகளின் கழிவுகள் சதுப்பு நிலத்தில் கொட்டப்படுகிறது. இதனால் சதுப்பு நிலம் என்கிற அந்தஸ்தை பள்ளிக்கரணை இழந்துவிடுமோ என்று நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, பல்லாவரம், வேளச்சேரி, நன்மங்கலம், சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், ஒக்கியம்பாக்கம் போன்ற ஏரிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வந்து சேர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சென்னையின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் போதுமான கழிவுநீர் செல்லும் பாதை வசதிகள் இல்லாததால் எளிதில் அவை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கலந்துவிடுகின்றன. அதேபோல, தான் பெருங்குடி கழிவுகள், தனியார் கட்டிட கழிவுகள் என எல்லாம் ஒன்றிணைந்து மாசுப்பாட்டை ஏற்படுத்திவிடுகிறது.

இவை ஒருபுறம் இருந்தாலும், சதுப்பு நிலங்களை பாதுகாப்பது நமது கடமை. மேலும், அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து ராம்சர் அங்கீகாரம் பெற்ற ஒரு சதுப்புநிலம் கையைவிட்டு போகாத வண்ணம் பாதுகாக்க வேண்டும். மேலும், பாதாள கழிவுநீர் உட்கட்டமைப்புகளை விரைவாக கண்காணித்து, அதற்கேற்ப சுத்திகரிப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என்றனர். இதுகுறித்து தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தின் உறுப்பினர் செயலர் தீபக் ஸ்ரீவஸ்தவா கூறி இருப்பதாவது:

சதுப்பு நிலங்களில் உள்ள நுழைவாயில்களை சுற்றி எஸ்.டி.பிக்கள் அமைப்பதற்கு அரசு தரப்பில் நிதி வழங்கவில்லை. குறிப்பாக, தற்போதைய நிலையில் சதுப்பு நிலத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை வரக்கூடிய வழிகளின் நிலைகளை அறிய டிரோன்கள் மூலம் கண்காணித்து அதற்கான அறிக்கையை ஜிசிசி மற்றும் வருவாய் துறையிடம் சமர்ப்பித்துள்ளோம். இதன் பிறகு, சதுப்பு நிலத்தில் உள்ள நீரின் தன்மை மற்றும் மண் தரத்தை பரிசோதனை செய்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post பெருங்குடி குப்பை கிடங்கு கழிவுகளால் மாசு ராம்சார் அங்கீகாரத்தை மீட்குமா பள்ளிக்கரணை சதுப்புநிலம்? கழிவுகளை அகற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: