வெளியே வேண்டாம் ராஜ் பவனுக்குள் வந்து போராட்டம் செய்யுங்கள்: முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் பதிலடி

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரும்பினால் ராஜ் பவனுக்கு உள்ளே வந்து போராட்டம் நடத்தலாம் என்று அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆசிரியர் தின நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘சட்டபேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் அனுமதி அளிக்காமல் தடுத்து வைத்து இருக்கிறார். மாநில உரிமைகளை பறிப்பதன் மூலமாக கூட்டாட்சி தத்துவத்தில் ஆளுநர் தலையிட்டால், நான் ராஜ்பவனுக்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவாகும். அநீதியை அனுமதிக்க மாட்டோம். எப்படி எதிர்த்து போராடுவது என்று வங்காளத்திற்கு தெரியும். காத்திருந்து பாருங்கள்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ஆனந்தபோஸ், ‘‘எனது மதிப்புமிக்க அரசியலமைப்பு சக ஊழியரான மாண்புமிகு முதல்வர் விரும்பினால் ராஜ்பவனுக்கு உள்ளே வந்து போராட்டம் நடத்தும்படி கேட்டுக்கொள்கிறனே். அவர் ஏன் வெளியில் நிற்க வேண்டும்?” என்று தெரிவித்துள்ளார்.

* எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,‘‘மேற்கு வங்க எம்எல்ஏக்கள் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிக குறைந்த தொகையை சம்பளமாக பெற்று வருகின்றனர். எனவே அவர்களது சம்பளத்தை ரூ.40ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

* வங்காள தினம்
மேற்கு வங்க சட்டப்பேரவையில் பொலியா பைசாக் எனப்படும் வங்க புத்தாண்டு தினத்தை மாநில தினமாக அனுசரிப்பதற்காக தீர்மானம் முன்மொழியப்பட்டது. 294 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் இந்த தீர்மானத்துக்கு 167 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவால் இந்த தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

The post வெளியே வேண்டாம் ராஜ் பவனுக்குள் வந்து போராட்டம் செய்யுங்கள்: முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: