நரம்பு சுருட்டல் நோய் இந்தியாவில் 10 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரிப்பு: மருத்துவர்கள் தகவல்

* சிறப்பு செய்தி
இந்தியாவில் நரம்பு சுருட்டல் நோய் கடந்த 10 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்து உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நம் உடலில் நரம்பு மண்டலம் முக்கியமான பணியை செய்து வருகிறது. ரத்தத்தை கை, கால் மற்றும் உடலின் அனைத்து பாகங்களிலிருந்தும் இதயத்துக்கு அது கொண்டு செல்கிறது. குறிப்பாக கால் பகுதியிலிருக்கும் நரம்புப் பகுதி காலிலிருந்து ரத்தத்தை இதயத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். புவியீர்ப்பு சக்திக்கு எதிராக இப்பணியை அது செய்து வருகிறது. அதுவும் இந்த நரம்புகளில், ரத்த ஓட்டத்தை ஒரு வழிப் பாதையாக மாற்றும் வால்வுகள் அமைந்துள்ளன.

இந்த வால்வு தன்னுடைய பணியை சீராக செய்யாத போது கால்களில் உள்ள கெட்ட ரத்தம் இதயத்துக்கு செல்ல முடியாமல் அங்கேயே தங்கிவிட வாய்ப்புண்டு. இதனால் சிரை குழாய்கள் ரத்த நாளங்கள் புடைத்து அல்லது வீங்குகின்றன. அது தோலுக்கு மேலே, நரம்புகள் புடைத்தபடி சுருள் சுருளாக சுற்றியவாறு பச்சை அல்லது கருப்பு நிறத்தில் ரத்தம் நின்றிருக்கும் வகையில் தெரிய ஆரம்பிக்கும். இதுவே நரம்பு சுருட்டல் நோயாகும். இது உயிருக்கு ஆபத்து ஏற்படாது ஆனால் வாழ்முறையை மிக மோசமாக பாதிக்கும். துணி, நகை கடை பணி , ஆசிரியர் பணி, கண்டக்டர் பணி, நீண்ட நேரம் நாள் முழுவதும் உட்காராமல் வேலை பார்ப்பது போன்றவர்களுக்கு இந்த வெரிகோஸ் வெயின் தாக்கம் இருக்கும்.

பெண்களுக்கு கருப்பை காலத்தில் வயிற்றில் உண்டாகும் அழுத்தம் காரணமாகவும் இவை உண்டாவதுண்டு. ஆண்களைவிட பெண்களை அதிகம் தாக்க வாய்ப்புள்ளது. இந்த நரம்பு சுருட்டல் நோய்க்கு பல அறிகுறிகள் உள்ளன. அவை, கால் வீக்கம் ஏற்படும், பாதங்களில் அரிப்புகள் இருக்கும். ஓய்வாக இருக்கும் போதும் இரவு நேரங்களிலும் தசை பிடிப்பு ஏற்படும். சில நேரங்களில் அரிப்பு இருக்கும் போது அந்த இடத்தில் தேய்த்தால் புண் உண்டாகும். அவை ஆறாமல் நீண்ட நாள்கள் இருக்கும். அந்த இடம் மட்டும் கருப்பு நிறமாக மாறிவிடும். இதை அலட்சியப் படுத்தும் போது கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாக பாதிக்கும். சில சமயங்களில் கால்கள் செயலிழக்கவும் செய்யும். தற்போதிய காலகட்டத்தில் இந்த நரம்பு சுருட்டல் நோய் மக்களிடையே அதிகரித்து வருகிறது ஆனால் மக்களிடையே இது தொடர்பாக விழிப்புணர்வு அதிகமாக இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக எம்ஜிஎம் மருத்துவர் சிவராஜ் கூறியதாவது: மக்கள் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை இந்த நோய் பாதிப்படைந்த உடன் பல்வேறு அறிகுறிகள் தெரியும் குறிப்பாக கால் வீக்கம், கால் வலி தசை பிடிப்பு உள்ளிட்டவை ஏற்படும் அதுமட்டுமின்றி சில நேரங்களில் தோல் கருப்பாக மாறிவிடும் மக்கள் எதற்காக தோல் மருத்துவர்களிடம் சென்று விடுவார்கள் அதை அவர்கள் கண்டுபிடித்து வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது. எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இது குணப்படுத்த கூடிய நோய்களில் ஒன்றாகும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் கவனிக்கப்படக்கூடியது ஒன்றாகும். கடந்த 10 ஆண்டுகளில் இந்த நோய் பாதிப்பு 20% முதல் 30% அதிகரித்து உள்ளது. இந்த நோய்க்கான சிகிச்சை முறை, சரியான நோயறிதலில் தொடங்கி, எந்த விதமான சிகிச்சை அளிப்பது என்பதில் இணைந்து, அறுவை சிகிச்சை, லேசர், ரேடியோகதிர்வீச்சு போன்ற சிகிச்சைகளில் சரியானவொன்றை தேர்ந்தெடுத்து சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

* நோய் வராமல் தடுக்க பல வழிகள்
ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்று கொண்டு உட்கார்ந்துகொண்டு இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இடுப்புக்கு கீழ் அணியும் ஆடைகளை இறுக்கமாக அணிய கூடாது. உட்கார்ந்து கொண்டே பணி செய்பவர்கள் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து நடந்து செல்வது நல்லது. உடற்பயிற்சி செய்யவில்லையென்றாலும் நடைபயிற்சி மேற்கொள்வது அவசியம்.

The post நரம்பு சுருட்டல் நோய் இந்தியாவில் 10 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரிப்பு: மருத்துவர்கள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: