இந்தியாவிலேயே தொழில்துறையில் தமிழகத்தை 2023க்குள், 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக கொண்ட மாநிலமாக மாற்றும் தொலைநோக்கு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார். இதில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையை பொறுத்தவரை வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழில் வளர்ச்சி நிறுவனம், செய்தித்தாள் காகித நிறுவனம், சிமென்ட்ஸ் நிறுவனம், உப்பு நிறுவனம் என செயல்பட்டு வருகிறது.
டிக் நிறுவனம் குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு நிதியுதவியினை வழங்கி வருகிறது. டிக் நிதியாண்டில் முதன்முறையாக ரூ.105 கோடி நிகர லாபமாக எட்டியது. மேலும், தொழில் நிறுவனங்களின் விரிவாக்க திட்டங்களுக்கும் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கு நிலம் வாங்க, தொழிற்சாலை கட்டிடங்கள் கட்டுவதற்கும், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கி பொருத்துவதற்கும், தொழிலுக்கு தேவையான நடைமுறை மூலதனம் பெறுவதற்கும் உண்டான நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது.
இது தவிர, தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம், தமிழ்நாடு ட்ரான்ஸ்மிஷஸின் கார்ப்பரேஷன், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், தமிழ்நாடு காகித நிறுவனம், சென்னை பெருநகர மாநகராட்சி போன்றவற்றின் ஒப்பந்ததாரர்களுக்கும், ‘‘பில் ஃபைனாஸ் திட்டம்’’ என்ற திட்டம் மூலம் ரூ. 1.30 லட்சததிற்கும் மேல் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி உள்ளது. இதில், நிதி சேவைகள், தொழில்நுட்ப ஆலோசனை வழங்குதல், சந்தைப்படுத்துதல், திறன் மேம்பாடு, மூலப்பொருள் கொள்முதல், வளர்ந்து வரும் துறைகளில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக, இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையிலான குழு பல்வேறு டிக் வளர்ச்சிக்கான பணிகளில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் டிஜிஎம் ரமேஷ் கூறியதாவது: தொழில்துறை மற்றும் உற்பத்தி துறை சார்ந்த தொழில் முனைவோருக்கு தொழில் எவ்வாறு மேம்படுத்துவது அதற்கான கடன் எவ்வாறு பெறுவது உள்ளிட்ட உதவிகளை தொடக்கத்திலிருந்து இறுதிவரை டிக் செய்து கொடுக்கும். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து வசதிகளும் நாங்கள் செய்து வருகிறோம். அரசு துறை சார்ந்த நிறுவனமாக இருப்பதால் அரசுடைய ஆதரவு எளிதில் எங்களுக்கு கிடைக்கும் இதனால் தொழில் முனைவோருக்கான உதவிகளை விரைந்து செய்து கொடுக்க முடிகிறது. அதுமட்டுமின்றி தொழிற்சாலை அதிகமாக உள்ள பகுதிகளுக்கு சென்று அங்குள்ள தொழில் முனைவோரிடம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த மாதம் 21 தேதி முதல் இந்த மாதம் 1ம் தேதி வரை மாநிலம் முழுவதும் ‘சிறப்பு கடன் வழங்கும்’ விழா தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இதில் அதிகாரிகள், தொழில் முனைவோர், மாவட்ட தொழில் மையங்கள், சிப்காட், சிட்கோ, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கங்கள், பெண் தொழில் முனைவோர், உள்பட பல்வேறு சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்ற சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும், புதியதொழில் தொடங்க இருக்கும் தொழில் முனைவோர்களுக்கும், தங்கள் தொழிலை திறம்பட செய்யத் தேவையான அனைத்து உதவிகளையும், ‘ஒரே இடத்தில் தீர்வு’ என்ற அடிப்படையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தொழில் நிறுவனங்களின் நிதி தேவைகளை செய்து வருகிறது. கிட்டதட்ட 41 கோடி வரை நாங்கள் கடன் வாங்கி கொடுக்க தயாராக இருக்கிறோம்.
அதுமட்டுமின்றி தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் நிர்வாக கடன் தொகை வரும் இரண்டு ஆண்டுகளில் ரூபாய் 5000 கோடியாக உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் பணியாற்றி வருகிறோம். மேலும், இந்த கழகம் மூலதன மானியம், தொழில்நுட்ப மேம்படுத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டங்களுக்கு 5% வட்டி மானியம் போன்ற பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறோம் என்றார். இதுதொடர்பாக, தொழில் முனைவோர்கள் கூறியதாவது: வங்கியில் தொழில் கடன் வாங்குவது என்பது கடினமான விஷயமாக இருக்கும். ஆனால் இந்த நிறுவனத்தின் மூலமாக எங்களுக்கு அனைத்தையும் செய்து கொடுக்கப்பட்டு, அந்த தொழில் வெற்றி வாய்ப்புகளையும் உண்டாக்கி தரும். அந்தவகையில் எங்களின் பணி இதில் ஒன்றே ஒன்று தான் அவை கையெழுத்திடுவது. மற்றவை அனைத்து பணிகளுமே அந்த நிறுவனமே பார்த்துக்கொள்கிறது. இது எங்களின் தொழில் வளர்ச்சி அடைவதற்கு ஊக்கம் அளிக்கும் விதமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
* தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அனைத்து மாவட்டத்திலும் உள்ளது. தொழில் முனைவோர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். தொடர்புக்கு : 044-24306200 அல்லது https://www.tiic.org/ என்ற இணையதளத்தில் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
* தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு மட்டுமின்றி, பிற மாநில தொழில் முனைவோர் தமிழ்நாட்டில் வர்த்தகம் செய்யும்பட்சத்தில் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்ய இந்த கழகம் செய்ய தயாராக உள்ளது.
இந்த முதலீட்டு கழகத்தில் உள்ள திட்டங்கள்
* பொது காலக்கடன்
* இயந்திர நிதியுதவி திட்டம்
* இயந்திர நிதியுதவி திட்டம்-துரித சேவை
* எளிய நடைமுறை மூலதன திட்டம்
* சிறப்பு வாடிக்கையாளர் திட்டம்
* வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்
* புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்.
* மருத்துவர்கள் திட்டம்
* தொழில் உள்கட்டமைப்பு முன்னெடுப்பு திட்டம்
* தொடக்க நிலை நிறுவன திட்டம்
* காற்றாலை, சூரிய சக்தி திட்டம்
* பட்டி நிதியுதவி் திட்டம்
The post தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு ரூ.41 கோடி வரை கடன் பெற்றுத் தர தயாராக இருக்கும் ‘டிக்’ நிறுவனம்: 2 ஆண்டுக்கு ரூ.5000 கோடி இலக்கு; நவீனமயமாக்கல் திட்டங்களுக்கு 5% வட்டி மானியம் appeared first on Dinakaran.