ரூ.50 கோடியில் பணிகள் விறுவிறு… நீர்நிலை சுற்றுலாத் தலமாகும் மதுரை வண்டியூர் கண்மாய்


* 7 கி.மீ தூரத்தில் நடைபாதை, யோகா, தியான மையம்
* உடலுக்கும், உள்ளத்துக்கும் உவகை தரும் இடமாக அமையும்

மதுரை: மதுரையில் உள்ள வண்டியூர் கண்மாய் ரூ.50 கோடியில் நீர்நிலை சுற்றுலாத் தலமாக அமைக்கப்படுகிறது. இதில், சிறுவர்கள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கப்படுகின்றன. உடலுக்கும், உள்ளத்துக்கும் உவகை தரும் இடமாக அமைகிறது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த பெருநகரமாக பழம்பெருமை மிக்க மதுரை திகழ்கிறது. இங்குள்ள பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் இயற்கை சார்ந்த சுற்றுலாத்தலம் இல்லை என்ற குறை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதனை போக்கும் வகையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியை ஒட்டிய வண்டியூர் கண்மாயை பொழுதுபோக்கு சுற்றுலாத் தலமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இயற்கை எழில் பொங்கும் நீர்நிலை சுற்றுலாத்தலமாக அமைய உள்ள இந்த சுற்றுலா தலம் எவ்வாறு அமைய உள்ளது என்பது குறித்த மாதிரி புகைப்படங்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டன. 450 ஏக்கரில் அமைந்துள்ள வண்டியூர் கண்மாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால், நீர்நிலை சுற்றுலாத் தலமாக மாற்றப்படுகிறது. வண்டியூர் வண்டியூர், கோமதிபுரம், மேலமடை, மானகிரி, தாசில்தார் நகர், அண்ணா நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர இக்கண்மாய் நீர் ஆதாரமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.50 கோடியில் டூரிஸ்ட் ஸ்பாட் திட்டம்
வண்டியூர் கண்மாயில் ரூ.50 கோடியில் ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநில அரசு இதற்கான ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தின் கீழ் கண்மாய் படுகையை பலப்படுத்துதல், படகு சவாரி, கண்மாய் மேற்கு, வடக்கு பகுதி கரையோரம் சைக்கிள் பாதை, நடைபயிற்சி பாதை, யோகா, தியான மையம், சிற்றுண்டி, சிறிய நூலகம், குழந்தைகள், முதியோர், விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், இறகுப்பந்து மைதானம், வாகன நிறுத்துமிடம், நவீன கழிப்பறை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்டவை அமைகிறது. இப்பணிகளை துவங்குவதற்கான பூமி பூஜை கடந்த ஜூலை இறுதியில் நடத்தப்பட்டு, பணிகள் தற்போது விறு விறுப்படைந்துள்ளது. கண்மாய் ஆக்கிரமிப்பில் சுருங்கிப்போயிருக்கிறது. கண்மாயைச் சுற்றிய ஆக்கிரமிப்புகள் சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

கண்மாய் மையத்தில் அழகிய தீவு
அதிகாரிகள் கூறும்போது, ‘‘இதன்படி, கண்மாயைச் சுற்றிலும் 7 கி.மீ. நடைபாதை உருவாக்கும் பணி வேகமடைந்துள்ளது. கண்மாயின் மையத்தில் அழகான சிறிய தீவு உருவாக்கப்படுகிறது. அந்த தீவுக்கு பொதுமக்கள் மரப்பாலம் வழியாக கண்மாயின் அழகை ரசித்தபடியே நடந்து செல்லவும் மரப்பாலத்தில் ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாற இருக்கைகளும் அமைக்கப்படுகின்றன. மேலும் படகு சவாரி வசதியும் ஏற்படுத்தப்படும். கண்மாயை ரசிக்க வரும் குழந்தைகள், பெரியவர்களுக்கு உணவருந்த சிற்றுண்டி கடைகளும் அமைகிறது, மேலும் கண்மாய்க் கரை பகுதியில் இரவை அழகாக்க இசை நீரூற்றும் அமைகிறது. இத்திட்டப்பணிகள் முழுமை அடையும்போது, எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இப்பகுதி அமையும்’’ என்றனர்.மதுரை சுற்றுலா ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘மதுரையில் திரையரங்குகளை விட்டால் பொதுமக்களுக்கு வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலையில் இந்த சுற்றுலா தலம் மிகப்பெரிய வரப்பிரசாதம். இது நீர் நிலை சார்ந்த சுற்றுலா தலமாக அமைவது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. முதியோர்கள், சிறார்களுக்கும் மகிழ்ச்சியை தரும் வகையில் அமைவது மேலும் சிறப்பாகும்’’ என்றனர்.

The post ரூ.50 கோடியில் பணிகள் விறுவிறு… நீர்நிலை சுற்றுலாத் தலமாகும் மதுரை வண்டியூர் கண்மாய் appeared first on Dinakaran.

Related Stories: