மயிலாடுதுறை வதானேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக 5 யானைகளில் காவிரி துலாக்கட்டத்தில் புனிதநீர் வீதியுலா

மயிலாடுதுறை, செப்.6: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் (வள்ளலார்) கோயில் உள்ளது. இக்கோயிலில் மேதாதட்சிணாமூர்த்தி இடபநந்தியின்மேல் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மேதா என்பதற்கு ஞானம் என்பது பொருளாகும். நந்திதேவருக்கு ஞானம் வழங்கிய சிறப்பால் இவர் இப்பெயர் பெற்று விளங்குகிறார். அதனால் இக்கோயில் குருபரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இவ்வளவு சிறப்பு மிக்க இக்கோயில் கடந்த 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதனையடுத்து தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ல கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முயற்சியில் கோயில் முழுவதும் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு வரும் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாகசாலை 37 குண்டங்களுடன் அமைக்கப்பட்டு 61 சிவாச்சாரியார்கள் பாலச்சந்திரசிவாச்சாரியார் தலைமையில் யாகபூஜை செய்கின்றனர். யாகசாலை கடங்களுக்காக கங்கை, யமுனை, காவிரி, நர்மதை, கோதாவரி உள்ளிட்ட புண்ணிய நிதிகளில் தீர்த்தங்கள் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இருந்து கடங்களில் நிரப்பி தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ல கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் வீதியுலா நடந்தது.

பஞ்சபிர்மம் என்று சொல்லக்கூடிய 5 கலசங்கள் திருக்கடையூர், திருவையாறு, சுவாமிமலை, சமயபுரம், ரங்கம் ஆகிய பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட 5 யானைகள் மீது வைத்து மங்களவாத்தியங்கள், வேதம், திருமுறை பாராயணத்துடன் காவிரி துலாக்கட்டத்தில் இருந்து கோயில் நான்கு வீதிகளை வலம்வந்து யாகசாலையை சென்றடைந்தது. மிருத்சங்கிரஹனம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம் நிகழ்ச்சியும், இன்று 6ம் தேதி காலை சாந்திஹோமம், மூர்த்திஹோமம், பிரச்னானபிஷேகம், கும்பலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசத்துடன் இன்று மாலை 6 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. வரும் 10ம் தேதி காலை 6 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜை தொடங்கி காலை 8.30 மணிக்கு பூர்ணாஹூதி யாகசாலையில் இருந்து கடங்கள் புற்பபட்டு கோயிலை வலம் வந்து காலை 9.15 மணியளவில் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதில் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், சிவகுருநாததம்பிரான் சுவாமிகள், ஆதீன கண்காணிப்பாளர் மணி, கல்லூரி செயலர் செல்வநாயகம், முதல்வர் சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெகவீரபாண்டியன், நகர மன்ற தலைவர்செல்வராஜ், துணைத்தலைவர் சிவக்குமார், உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

The post மயிலாடுதுறை வதானேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக 5 யானைகளில் காவிரி துலாக்கட்டத்தில் புனிதநீர் வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: