மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ,மாணவிகள் விமானம் மூலம் மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு கல்வி சுற்றுலா: முதல்முறையாக வெளிநாடு செல்கின்றனர்

சென்னை: தமிழ்நாடு அரசின் புதிய முயற்சிகள் மூலம் மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சுற்றுலா செல்கின்றனர். இதனால் தமிழ்நாடு அரசுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பள்ளிக்‌ கல்வித்‌ துறை சார்பில் 2022-2023ம்‌ ஆண்டில் மாநில அளவில்‌ நடந்த எழுத்து, பேச்சு, கட்டுரை உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாநில அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களில் 21 அரசு பள்ளி மாணவர்-மாணவிகள் அடங்கிய குழு, இன்று முதல் வரும் 9ம் தேதி வரை மலேசியாவுக்கு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

25 மாணவ-மாணவிகள் அடங்கிய 2வது குழுவினர் செப்டம்பர்‌ 6 முதல்‌ 11 வரை சிங்கப்பூருக்குக் கல்வி சுற்றுலா செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். மாணவர்களுடன் ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் இணை இயக்குனர் கொண்ட குழுவும் செல்கிறது. இதில் ஒருவர் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர். மலேசியா-சிங்கப்பூர் செல்லும் மாணவர்களுக்கு அரசு வழங்கி உள்ள வழிமுறைகள்: விமானம் புறப்படும் நேரத்துக்கு 4 மணிநேரம் முன்பாக மாணவர்கள் விமான நிலையம் வர வேண்டும். மாணவர் அல்லது மாணவிகள்‌ தங்களுடன் பெற்றோரில் ஒருவரை அழைத்து வரலாம்.

அவர்களுக்கான செலவை அரசு ஏற்று கொள்ளும். வெளி மாவட்ட ஆசிரியர்கள்‌, மாணவர்கள்‌ மற்றும்‌ அவர்களது பெற்றோர்களுக்கான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் சைதாப்பேட்டை ஆசிரியர்‌ இல்லத்தில்‌ செய்து தரப்படும்‌. தங்கள் பிள்ளைகளை தொடர்பு கொள்ள பெற்றோர் இரவு 7-8.30 மணிவரை தொடர்பு கொள்ளலாம்‌. மாணவ-மாணவிகள் 5 நாட்களுக்கு தேவையான துணி, மருந்து மற்றும்‌ தேவையான பொருட்களை எடுத்து வரலாம். ஆனால், அவை 20 கிலோவிற்கு அதிகமாக இருக்க கூடாது. சிறிய கைப்பை அல்லது சிறிய பெட்டிகளில்‌ 7 கிலோ கிராம்‌ வரையிலான பொருட்களை கையில்‌ வைத்துக்கொள்ளலாம்‌.

இதில்‌ மருந்துகள்‌, மருத்துவ உபகரணங்கள்‌ போன்ற பொருட்களை வைத்துக்கொள்ளலாம்‌. ஒவ்வொரு ஆசிரியருக்கும்‌ 3 முதல்‌ 5 குழந்தைகளுக்கான பொறுப்புகள்‌ வழங்கப்படும்‌. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.9ம் வகுப்பு மாணவி ஜெரோலின்(ராமநாதபுரம்): பள்ளி கல்வி துறையினர் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று முதன்முதலாக சென்னைக்கு வந்துள்ளேன். அதேபோல முதன்முறையாக வெளிநாடுக்கு செல்வதை நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது. அதுவும், முதல்முதலில் விமானத்தில் சிங்கப்பூருக்கு செல்லப்போகிறேன் என நினைக்கும்போது சந்தோசம் அதிகரிக்கிறது.

என்னைபோல அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். மாணவியின் தாய் ஜெயகொடி (கோவை): என் மகள் அஜிதா (மூன்றாம் பாலினத்தவர்) கோயம்புத்தூரில் நடந்த தனி நபர் நடிப்பு போட்டியில் வெற்றி பெற்றார். தற்போது அவர் மலேசியா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படி ஒரு பயணத்தை என் மகளுக்கு என் வாழ் நாளில் என்னால் ஏற்படுத்தி தர முடியாது. ஆனால், பள்ளி கல்வித்துறையின் திட்டம், என் மகள் வெளிநாடு செல்லும் ஆசையை சாத்தியமாக்கி உள்ளது. என் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

பிறப்பில் ஆணாக இருந்த நிலையில் என் மகள் 9ம் வகுப்பு படிக்கும்போது தனக்குள் இருந்த மாற்றத்தை கூறினார். அப்போது நான் பயந்தேன். ஆனால் என் உயரதிகாரிதான் எனக்கு தைரியம் கொடுத்தார். உன் பிள்ளையை நீ ஆதரிக்கவில்லை என்றால் இந்த சமூகமும் அவளை ஒதுக்கிவிடும். இந்த நேரத்தில் நீதான் அவளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்றார். அதன் பின்னர், என்னை நான் மனதளவில் தயார் செய்து கொண்டேன். என் மகளுக்கு அன்பு, ஆதரவை தொடர்ந்து கொடுத்து அவளை ஊக்குவித்தேன். பள்ளி தலைமை ஆசிரியரும் அவளுக்கு துணையாக இருந்தார். தற்போது அவள் அனைத்திலும் சிறந்தவளாக வளர்ந்து வருகிறாள்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ,மாணவிகள் விமானம் மூலம் மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு கல்வி சுற்றுலா: முதல்முறையாக வெளிநாடு செல்கின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: