இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார்: வாகை. சந்திரசேகர் பேச்சு

பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், சூளையில் ‘திரைவானின் விடிவெள்ளி திராவிட தமிழ்ப்பள்ளி’ என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரவை அமைப்பாளர் புரசை ஜி.தாமோதரன் தலைமை வகித்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் தலைவர் வாகை. சந்திரசேகர், பேரவையின் துணைத் தலைவர் வாசு விக்ரம், ஆண்டாள் பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் வாகை சந்திரசேகர் பேசியது;
50 ஆண்டுகளுக்கு முன் தமிழின் பெருமையையும் கொள்கையுடைய கருத்துக்களையும் திரையில் கலைஞர் வசனமாக எழுதினார். பராசக்தி படத்தில் கலைஞர் எழுதிய கதை, வசனம் வெறும் சினிமா கதை வசனம் இல்லை. அது கழகத்தின் கொள்கைகளின் அரசியல் சாசனம். திரையில் புரட்சி செய்த நம் கலைஞர் பின்னாளில் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தினார். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கனவுகளை எல்லாம் நிறைவேற்றும் தலைவராக நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அந்த அடிப்படையில், முதல்வரின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். காலை உணவு திட்டம் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பயன்பெற்று வரும்நிலையில் சிலர் தூற்றும் கருத்துகளையும் ஆதிக்க பத்திரிகைகளின் கருத்துக்களையும் கண்டுகொள்ளாமல் மக்கள் நலனே முக்கியம் என நம் முதல்வர் செயலாற்றுகிறார்.

கலைஞர், தன் அரசியல் பயணத்தில் தனித்தன்மையால் அவர் காட்டும் விரலே இந்தியாவின் பிரதமராக முடியும் என்ற நிலையை உருவாக்கி அதை சாதித்து காட்டியவர். அடுத்த இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டாலின் உள்ளார். ஒன்றிய அரசே அஞ்சும் அளவிற்கு இன்றைக்கு இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்து அடுத்த பிரதமரை அடையாளம் காட்டும் தலைவராக நம் முதல்வர் உள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் அதிகமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி மக்கள் சேவையில் சாதனை படைத்த நம் முத்தமிழறிஞர் கலைஞர்.

சினிமாவை தமிழுக்காவும் மக்களுக்காகவும் கொள்கைக்காகவும் பயன்படுத்தி கொண்ட ஒரே தலைவர் கலைஞர் மட்டும் தான். எழுத்து, பேச்சு, கவிதை, கட்டுரை, அரசியல் என தான் வகித்த அத்தனை துறைகளிலும் ஜொலித்தவர் கலைஞர்.நான், தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன். அனைவரும் சொல்லும் ஒரு வார்த்தை இந்த ஆட்சி சிறந்த ஆட்சி, தலைவர் ஸ்டாலின் இன்னும் பல ஆண்டுகள் முதல்வராக ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, இனிவரும் அனைத்து தேர்தலிலும் நம் கழகமே வெற்றிபெறும். இவ்வாறு பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில், பகுதி செயலாளர்கள் வேலு, சுதாகர், வட்ட செயலாளர்கள் பாலு, மனோகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார்: வாகை. சந்திரசேகர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: