கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் மட்டும் 11 பெண் ஓதுவார்கள் நியமனம் : சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்

சென்னை : திமுக ஆட்சிக்காலத்தில் 11 பெண் ஓதுவார்கள் உட்பட 29 கோவில்களில் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அப்போது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் விரிவாக்க பணிகள் குறித்த கேள்விக்கு, திருவண்ணாமலை கோவிலுக்காக முதற்கட்ட மாஸ்டர் பிளான் திட்டத்திற்காக ரூ.36.41 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெறுவதாக கூறிய அவர், 2வது மாஸ்டர் பிளான் விரைவில் திட்டமிடப்பட உள்ளதாகவும் இது தொடர்பாக துறையின் மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தாம்பரம் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா எழுப்பிய கேள்விக்கு, இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாடம்பாக்கம் தேனபுரீஸ்வரர் கோயிலிலும் பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டு அனைத்து பூஜைகளும் கால நேரத்தின்படி நடந்து வருவதாக அவர் தகவல் அளித்துள்ளார். அத்துடன் தமிழ்நாடு முழுவதும் 29 கோவில்களில் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 11 பேர் பெண்கள் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். அதேபோல், கோவில் தங்கங்களை உருக்கும் பணி மூலம் கோவில் தங்கங்கள் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு ரூ.5.74 கோடி வைப்பு நிதி வங்கிகளில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், தங்கக் கட்டிகள் வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் 14 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

The post கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் மட்டும் 11 பெண் ஓதுவார்கள் நியமனம் : சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: