தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகரை கண்டுகொள்ளாதது ஏன்..? சாதி அடிப்படையில்தான் பாஜவில் நடவடிக்கையா..? திருச்சி சூர்யா பாய்ச்சல்

திருச்சி: பாஜ ஓபிசி அணியின் மாநில செயலாளராக பதவி வகித்த திருச்சி சூர்யா, கடந்த 2022ம் ஆண்டு பாஜ சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாக நவம்பர் 2022ல் இருந்து 6 மாதம் நீக்கப்பட்டார். சில மாதங்களுக்கு பிறகு கட்சியில் இணைக்கப்பட்ட அவருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, அண்ணாமலை தலைவரான பிறகுதான் ரவுடிகள் கட்சியில் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழிசை தெரிவித்தற்கு பதில் அளித்து திருச்சி சூர்யா, ‘குற்ற பின்னணி உள்ளவர்கள் பாஜவில் சேர்க்கப்பட்டது தமிழிசை பரிந்துரையில் மாநில தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில்தான். கட்சியின் வளர்ச்சியையும், தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்க முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது’ என்று கூறியிருந்தார். இதைதொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதேபோல் அண்ணாமலை மீது குற்றம்சாட்டிய பாஜ சிந்தனையாளர் பிரிவு மாநில செயலாளர் கல்யாண ராமனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து திருச்சி சூர்யா தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் வௌியிட்டுள்ள பதிவில், ‘அண்ணாமலைக்காகத்தான் பதில் அளித்தேன். அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சி. இனி பாஜவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது’ என தெரிவித்தார்.

இந்நிலையில், திருச்சி சூர்யா நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
பாஜ மையக் குழுவில் கட்சி தலைமையும் தலைவர்களையும் விமர்சித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று என்னையும் கல்யாண ராமனையும் நீக்கினீர்கள். நியாயம் ஏற்றுக் கொள்கிறேன். இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்து கட்சியில் ரவுடிகள் இருக்கிறார்கள் என்றும், அதிமுகவுடனான கூட்டணியை கெடுத்து வெற்றியை தடுத்து விட்டார் என்றும் மாநிலத் தலைவரின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்த தமிழிசை மேல் நடவடிக்கை ஏன் இல்லை? நாடார் என்பதாலா?

தமிழிசை சொன்னதை உண்மை என்று இந்திய தேசிய பாஜ தலைமை கருதி இருந்தால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்தது எது கவுண்டர் லாபியா? தமிழ்நாட்டில் பாஜ நாற்பது இடங்களில் தோற்றதற்கு வீட்டு வாசலில் வெடி வெடித்து கொண்டாடிய, திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய எஸ்.வி.சேகர் இன்னும் பாஜ உறுப்பினராக இருக்கிறார். ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? பிராமணர் என்பதாலா? சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா? எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து Social Engineering அப்பட்டமாக அம்பலப்பட்டிருக்கிறது. இவ்வாறு கடுமையாக விமர்சித்துள்ளார்.

‘தமிழிசை மீது ஊழல் பட்டியல் விரைவில் சந்திக்கிறேன்’
திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘அக்கா உங்களை மறந்துவிட்டேன் என்று நினைக்காதீர்கள். கண்டிப்பாக உங்களுக்கான முக்கியத்துவம் பாஜ கொடுக்கவில்லை என்றாலும் என் மனதில் கண்டிப்பாக உண்டு. புதுவை பாஜவை அழித்தது பத்தாது என்று இப்போது தமிழ்நாட்டு பாஜவிலும் களம் இறங்கி அழித்துக் கொண்டிருக்கும் உங்களை மறப்பேனா? உங்கள் நீண்ட ஊழல் பட்டியலை பாண்டிச்சேரியில் எடுத்து தொகுப்பதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிறது. விரைவில் பட்டியலோடு சந்திக்கிறேன். வருத்தம் வேண்டாம் அக்கா’ என கூறியுள்ளார்.

The post தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகரை கண்டுகொள்ளாதது ஏன்..? சாதி அடிப்படையில்தான் பாஜவில் நடவடிக்கையா..? திருச்சி சூர்யா பாய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: