மாமல்லபுரத்தில் சுற்றுலா வளர்ச்சி பணிகளுக்காக ₹100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

மாமல்லபுரம், செப். 2: மாமல்லபுரத்தில், சுற்றுலா வளர்ச்சி பணிகளுக்காக ₹100 கோடி ஓதுக்கீடு செய்யப்படவுள்ளது என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் கடந்த 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் செதுக்கப்பட்ட சிற்பங்களை யுனோஸ்கோ நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இந்த சிற்பங்களை காண உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாமல்லபுரத்தின் சிறப்புகளை உலக நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில் 186 நாடுகள் பங்கேற்ற சர்வதேச 44வது சதுரங்கப் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்தி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இங்குள்ள சிற்பங்களின் வரலாறு தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், மாமல்லபுரம் பழைய சிற்பக் கல்லூரி சாலையில் மரகத பூங்காவில் சுற்றுலாத் துறையுடன் இணைந்து தனியார் மற்றும் பொதுப் பங்களிப்புடன் ₹8 கோடி மதிப்பில், 10 லட்சம் மின் விளக்குகளை கொண்டு விலங்குகள், வண்ணவண்ண ஒளிரும் பூக்கள், ஒளிரும் மரங்கள், செல்பி எடுக்கும் இடங்கள், செயற்கை நீரூற்று, மினி 5டி சினிமா, ஒளிரும் நீர் பூங்கா மற்றும் பலதரப்பட்ட உணவு அரங்குகள் என 2.47 ஏக்கர் பரப்பளவில் அமைக்க நேற்று பூமி பூஜை நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு, சுற்றுலா துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினர்களாக சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு நேற்று காலை பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தனர்.

பின்னர், அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘மாமல்புரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், 2.47 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒளிரும் தோட்டம் அமைக்க முடிவெடுத்து. அரசு, தனியார் பங்களிப்புடன், பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இதில், வரும் வருமானத்தில் ஒரு பங்கு தனியாருக்கும், ஒரு பங்கு அரசுக்கும் சமமாக பிரித்து வழங்கப்படும். இத்திட்டத்தை, 6 மாதத்திற்குள் முடிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் முடித்து கொடுப்பதாக தனியார் நிறுவனம் கூறியுள்ளது.அப்படி, முடியும் பட்சத்தில் ஜனவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்.

ஒன்றிய, அரசின் சுவ்தேஷ் திட்டத்தின் மூலம் தமிழகத்தில், அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் ₹100 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அர்ஜூனன் தபசு சிற்பத்தின் அருகே ₹5 கோடி மதிப்பில் 3டி லேசர் ஒளிக்கற்றைை கொண்டு ஒலி, ஒளி காட்சி நடத்தப்பட உள்ளது. அனைத்து, மாவட்டங்களிலும் 2 இடங்களில் சுற்றுலா வளர்ச்சி பெறும் இடங்களை கண்டறிந்து பல்வேறு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். மாமல்லபுரத்தில் பஸ் நிலையம் கட்டும்பணி விரைவில் தொடங்கும்.’’ இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொது மேலாளர் கமலா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், திருப்போரூர் ஒன்றிய சேர்மன் இதயவர்மன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மாமல்லபுரத்தில் சுற்றுலா வளர்ச்சி பணிகளுக்காக ₹100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: