சென்னை காதர் நவாஸ்கான் சாலையில் ரூ.19.81 கோடியில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணி: அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல்

சென்னை: சென்னை மாநகராட்சி காதர் நவாஸ்கான் சாலையில் ரூ.19.81 கோடியில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார். சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-111, காதர் நவாஸ்கான் சாலையில் உலக வங்கியின் சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், மாநில உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி மற்றும் சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.19.81 கோடி மதிப்பீட்டில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, திட்ட வரைபடங்களை பார்வையிட்டு, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த நடைபாதை வளாகம் வண்டி பாதை, மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் நடைபாதை, துணை கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி, மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள் செல்ல பிரத்யேக குழாய்கள், புதிய மழைநீர் வடிகால்கள் அமைத்தல், அலங்கார விளக்குகள், இருக்கைகள், பூந்தொட்டி, ஒளிரும் பொல்லார்டுகள், சாலை சந்திப்புகளை மேம்படுத்துதல் போன்ற முக்கிய அம்சங்களுடன் அமைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, தேனாம்பேட்டை மண்டலம், மாம்பலம் கால்வாயில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 133, 141க்குட்பட்ட தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் 1200 மீ. நீளத்தில் 8.40 மீ. அகலத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலப் பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார். இந்த பாலப் பணிகள் முடிவடைந்த பிறகு 2 லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். தினமும் 40 ஆயிரம் வாகனங்கள் பாலத்தின் வழியாகச் செல்லும். தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலம், அசோக் நகர் 11வது நிழற்சாலையில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் 0.681 கி.மீ. நீளத்தில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணியை அமைச்சர் பார்வையிட்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முடிக்க அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் மேயர் பிரியா, எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் எழிலன், த.வேலு, கருணாநிதி, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் குறித்து ஆய்வு
கோடம்பாக்கம் மண்டலம், நெசப்பாக்கத்தில் ரூ.86.94 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் ரூ.31.53 கோடி மதிப்பீட்டில் கே.கே.நகர் அண்ணா பிரதான சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவுநீர் கட்டமைப்பினை மாற்றி அமைக்கும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்து, கட்டுமான பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post சென்னை காதர் நவாஸ்கான் சாலையில் ரூ.19.81 கோடியில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணி: அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: