டைமண்ட் லீக் தடகள போட்டி: ஈட்டி எறிதலில் நீரஜ்சோப்ரா 2வது இடம்

சூரிச்: ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த வாரம் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை படைத்தார். 25 வயதிலேயே தடகள ஜாம்பவான் அந்தஸ்தை நீரஜ் சோப்ரா பெற்றதாக ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் ஸ்விட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் நடைபெறும் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் நீரஜ் சோப்ரா பங்கேற்றுள்ளார். இந்த தடகள போட்டியின் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா 85.71 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டியை எறிந்தார்.

ஆனால் இவரை விட உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற செக் குடியரசு நாட்டின் வாட்லெஜ், 85.86 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்தார். இறுதி வாய்ப்பிலும் நீரஜ் சோப்ரா சொதப்ப, 2ம் இடத்திலேயே முடித்தார். நடப்பாண்டில் இந்தியாவின் தங்கமகன் முதல்முறையாக தங்கத்தை தவறவிட்டுள்ள தொடர் இதுதான். உலக சாம்பியன்ஷிப் தொடரில் 88 மீட்டருக்கும் அதிக தூரத்தை கடந்த நீரஜ் சோப்ரா, இம்முறை 85 மீட்டர் வரையிலேயே ஈட்டியை எறிந்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post டைமண்ட் லீக் தடகள போட்டி: ஈட்டி எறிதலில் நீரஜ்சோப்ரா 2வது இடம் appeared first on Dinakaran.

Related Stories: