இழப்புக்கு பொறுப்பேற்குமா ஒன்றிய அரசு பாராமுகத்தால் பொதுத்துறை நிறுவனத்துக்கு ஏற்பட்ட பரிதாபம்: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் சிஏஜியால் பாஜவுக்கு தொடரும் நெருக்கடி

‘‘ஒன்றிய அரசு சிஏஜி அமைப்பை உடனடியாக மூட வேண்டும். இந்த அமைப்பு வெளியிட்ட தணிக்கை அறிக்கையை வைத்துதானே மோடி தவறிழைத்து விட்டார் என ஊடகங்கள் அலறுகின்றன… 7 ஊழல்களை அம்பலப்படுத்தியிருக்கிறதே. முறைகேடுகளை புட்டுப்புட்டு வைத்திருக்கிறதே. அதற்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்… உடனே சிஏஜி மற்றும் அதன் அதிகாரிகள் மீது அமலாக்கத்துறையையும், சிபிஐ- யையும் ஏவி ரெய்டு நடத்த வேண்டும்’’ – சிஏஜி அம்பலப்படுத்திய ஒன்றிய பாஜ அரசின் முறைகேடுகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேலியும் கிண்டலுமாக இப்படி விமர்சித்தவர், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேத். ஏழரை லட்சம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பாஜ, எப்படி எதிர்க்கட்சிகளை ஊழல் கட்சிகள் என்று வாய்க்கு வந்த படி சொல்லலாம் என பல்வேறு தலைவர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தொடர்ந்து வரும் விமர்சனங்களை பாஜவால் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு சிஏஜி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஒன்றிய பாஜ அரசின் மீது முன்வைத்திருக்கிறது. ஊழல், முறைகேடு, அலட்சியம், நிர்வாகத் திறமையின்மை, விதி மீறல் என குற்றச்சாட்டுகள் நீண்டுகொண்டே போகின்றன. இந்த வரிசையில் சிஏஜியால் சுட்டிக்காட்டப்பட்ட முறைகேடுகளில் ஒன்று தான், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு. நவரத்தினா அந்தஸ்துப் பெற்ற இந்த பொதுத்துறை நிறுவனம், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. தெற்காசியாவின் முதல் போர் விமானத்தை உருவாக்கியது என்ற பெருமை பெற்றதும் இதுவே.

ஆனால், ரபேல் போர் விமானம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை இந்த நிறுவனத்துக்கு வழங்காமல் அனில் அம்பானி நிறுவனத்துக்கு வழங்கியதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் வெடித்தன. இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்தை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை நிறுவன ஊழியர்களே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் முறையிட்டனர். அப்போது, ரபேல் போர் விமானம் தயாரிக்கும் தகுதி இருந்தும் தங்களிடம் ஒப்படைக்காத ஒன்றிய அரசு, உலகளாவிய தொழில்நுட்பத்தில் வாய்ப்பு அளிக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்ற கவலையையும் வெளிப்படுத்தினர். அப்போது, ரபேல் போர் விமான ஊழல் விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

ஆனால், திட்டம் ஒப்படைக்கப்பட்டும் வழக்கம்போல் ஒன்றிய அரசு அலட்சியம் காட்டியதால்தான் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என சிஏஜி அறிக்கையை தொடர்ந்து ஒன்றிய அரசின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதாவது, இந்திய விமானப்படையில் பயிற்சி பெறும் விமானிகள், 3கட்ட பயிற்சி முடித்த பிறகுதான், போர் விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுவார்கள். முதல் கட்டமான சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட பிசி7 ரக விமானத்தில் மேற்கொள்ளப்படும். அடுத்ததாக கிரண் விமானத்தில் பயிற்சி பெறுவார்கள். 1960களில் இருந்து இந்த விமானங்கள் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மூன்றாவதாக இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஹாக் விமானத்தில் பயிற்சி வழங்கப்படும்.

இவ்வாறு பழைய விமானங்களில் பயிற்சி பெறவதற்கு பதிலாக, ஐஜெடி என்ற பயிற்சி விமானங்களை தயாரிக்கும் பணி இந்துஸ்தான் (எச்ஏஎல்) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், திட்டத்தை செயல்படுத்தியதில் தவறு, வடிவமைப்பில் ஏற்பட்ட கோளாறு மற்றும் உற்பத்தி தாமதம் போன்ற காரணங்களால், இந்த பயிற்சி விமானத்தை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தயாரித்து விமானப்படையிடம் ஒப்படைக்கவில்லை. இதனால் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இந்த நிறுவனத்துக்கு ரூ.159.23 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது. இந்த சிஏஜி அறிக்கை வெளியாவதற்கு முன்புதான், தேஜஸ் ஜெட் போர் விமானங்கள் உற்பத்தியில் இந்த நிறுவனம் உரிய காரணமே இல்லாமல் காலம் தாழ்த்தியதாக குற்றம் சாட்டு எழுந்திருந்தது. ஐஜெடி விமானத்தில் முதலில் பிரான்ஸ் நாட்டு இன்ஜின்கள்தான் பயன்படுத்தப்பட்டன.

தவறான இன்ஜினை தேர்வு செய்தது, முன்கூட்டியே முறையாக திட்டமிடாமல் இஷ்டத்துக்கு முடிவுகளை எடுத்தது, விமான உற்பத்திக்கு தேவையான பொருத்தமான பாகங்களைப் பயன்படுத்தாமல், அதற்கு மாற்றாக உள்ளதைப் பயன்படுத்தியது என, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சிஏஜி முன்வைத்துள்ளது. இவை எல்லாமே, பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாத்து வழி நடத்த வேண்டிய ஒன்றிய அரசு அக்கறையுடன் செயல்படாததால்தான் இப்படிப்பட்ட திட்ட தோல்விகளை சந்திக்க வேண்டி வந்து விட்டது. பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்து வரும்ஒன்றிய அரசு, அதே போன்றதொரு அலட்சியப்போக்கைத்தான் இந்துஸ்தான் ஏ ரோநாட்டிக்ஸ் மீது காட்டியிருக்கிறது. மேக் இன் இந்தியா எனக் கூறிக் கொண்டு, அதற்கேற்ப ஏற்கனவே உருவாக்கிய கட்டமைப்புகளை சிதைக்கிறது என எதிர்க்கட்சியினர் ஒன்றிய பாஜ அரசு மீது பாய்ச்சல் காட்டுகின்றன.

இன்ஜின் தேர்வு செய்ததில் மட்டுமல்ல, திட்டத்தின் பல்வேறு கட்டங்களில் தவறுகள் நடந்திருக்கின்றன என்பதை சிஏஜி சுட்டிக் காட்டியிருக்கிறது.சிஏஜி அம்பலப்படுத்தியுள்ள ஒவ்வொரு ஊழலுக்கும் பிரதமர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன. தொட்டதற்கெல்லாம் மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா என்ற வார்த்தைகளை பயன்படுத்தி ஜாலம் செய்து வரும் பாஜ அரசு, நவரத்தினா அந்தஸ்து பெற்ற போர் விமானம் தயாரிக்கும் திறன் பெற்ற ஒரு பொதுத்துறை நிறுவனத்தை நிராதரவாக்கி விட்டதோ என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், சிஏஜியின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.சிஏஜி தணிக்கை முடிவுகள், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிரான ஏவுகணையாக மாறியிருக்கின்றன எனவும், பாஜ ஊழல் கட்சி என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

*பொய் சொன்னாரா பிரதமர்?
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதன்மீது பதிலுரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் வருவாய் உயர்ந்திருக்கிறது. அவர்கள் (எதிர்க்கட்சியினர்) இந்த நிறுவன ஊழியர்களை தூண்டி விட்டு, எதிர்மறையான எண்ணத்தை பரப்ப முயற்சி செய்தனர். ஆனால், இன்று இந்த நிறுவனம் ஒளிர்கிறது. இதுவரை இல்லாத வருவாயை ஈட்டியிருக்கிறது. இதன்மூலம் நாட்டின் பெருமைக்குரிய நிறுவனமாகவும் இது ஆகியுள்ளது என்றார்.

ஆனால், அதே நாளில் சமர்ப்பிக்கப்பட்ட சிஏஜி அறிக்கையில்தான், ஒன்றிய அரசின் பாராமுகத்தால் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள ரூ.159 கோடி இழப்பு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வருவாய் உயர்ந்திருப்பதாக கூறிய பிரதமர், அதே நாளில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பிரதமரோ, அவரது அலுவலகமோ சிஏஜி அறிக்கை பற்றி அறிந்திருக்கவில்லையா? இதை எப்படி நம்புவது? நாடாளுமன்றத்தில் பேசும்போது கூட, அதேநாளில் தாக்கலான சிஏஜி அறிக்கையில் இழப்பு என குறிப்பிட்டும் பிரதமர் லாபம் கிடைத்ததாக கூறியது அப்பட்டமான பொய்யா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

The post இழப்புக்கு பொறுப்பேற்குமா ஒன்றிய அரசு பாராமுகத்தால் பொதுத்துறை நிறுவனத்துக்கு ஏற்பட்ட பரிதாபம்: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் சிஏஜியால் பாஜவுக்கு தொடரும் நெருக்கடி appeared first on Dinakaran.

Related Stories: