ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை உதவி இயக்குநர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

புதுடெல்லி: ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது. டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல் மதுபான வியாபாரி அமந்தீப் தால் என்பவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் இருந்து அமந்தீப் தால் பெயரை நீக்குவதற்காக அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவன் காத்திரி ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. ஏர் இந்தியாவின் உதவி பொது மேலாளர் தீபக் சங்வான், கிளாரிட்ஜஸ் ஓட்டல் மற்றும் ரிசார்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரமாதித்யா, ஆடிட்டர் பிரவீன் குமார் வாட்ஸ், நிதேஷ் கோஹார், பிரேந்தர் பால் சிங் ஆகியோர் இதற்கு உதவியது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கலால் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமந்தீப் தால் மற்றும் அவரது தந்தை பிரேந்தர் பால் சிங் ஆகியோர் ரூ.5 கோடி லஞ்சம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2022 டிசம்பரில் ஏர் இந்தியா உதவி பொது மேலாளர் தீபக் சங்வான் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவன் காத்ரிக்கு முன்பணமாக ரூ.50 லட்சம் கொடுத்ததாக ஆடிட்டர் வாட்ஸ் கூறினார்.இந்த அறிக்கையை அமலாக்கத்துறை சிபிஐக்கு அனுப்பி வைத்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவன் காத்ரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

The post ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை உதவி இயக்குநர் மீது சிபிஐ வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: