உலகெங்கிலும் மொழி, மத, ஜாதி, இன வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை: கே.எஸ். அழகிரி வாழ்த்து

சென்னை: எவ்வித வேறுபாடுமின்றி பண்பாடு, கலாச்சாரத்தை தனித்தன்மையுடன் காப்பாற்றி, சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வருகிற மலையாள பெருமக்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்து கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உலகெங்கிலும் உள்ள மலையாளப் பெருமக்கள் எவ்வித மொழி, மத, ஜாதி, இன வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

தமிழகத்தில் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட லட்சக்கணக்கான மக்கள் பல சிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்தி மிகச் சிறப்பான வகையில் பணியாற்றி வருகின்றனர். மொழி ரீதியாக எந்த வேறுபாடும் இல்லாமல் சமத்துவம், சகோதர உணர்வு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை கடைபிடித்து, சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மேற்கொள்கிற முயற்சிகளில் வெற்றி பெற்று சிறப்புடன் வாழ்ந்து வருவது மிகவும் பாராட்டுக்குரியதாகும். ஓணம் திருநாள் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவின் நிறைவில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்துகிற வகையில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

எனவே, எவ்வித வேறுபாடுமின்றி பண்பாடு, கலாச்சாரத்தை தனித்தன்மையுடன் காப்பாற்றி, சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வருகிற மலையாள பெருமக்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post உலகெங்கிலும் மொழி, மத, ஜாதி, இன வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை: கே.எஸ். அழகிரி வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: