கன்னியாகுமரியில் கார் மீது பைக் மோதி நர்சிங் மாணவர் பலி: மேலும் 2 பேர் படுகாயம்

 

நாகர்கோவில், ஆக.28: கன்னியாகுமரியில் கார் மீது பைக் மோதிய விபத்தில் நர்சிங் கல்லூரி மாணவர் பலியானார். இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். கன்னியாகுமரி அச்சன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஐசக். இவரது மகன் ஜோனீஸ் (19). பெங்களூருவில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வந்தார். சமீபத்தில் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த ேஜானீஸ், நேற்று முன் தினம் தனது நண்பர்கள் அச்சன்குளம் பகுதியை சேர்ந்த சுபின் (19), கன்னியாகுமரி செல்வன்புதூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (23) ஆகியோருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

பைக்கை ஜோனீஸ் தான் ஓட்டினார். கன்னியாகுமரி நரிக்குளம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த காரில் பைக் மோதியது. இதில் பைக்கில் இருந்த மூவரும் தூக்கியெறியப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாக வந்த பொதுமக்கள் மூவரையும் மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில் ஜோனீஸ் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு ஜோனீஸ் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து காரை ஓட்டி வந்த கன்னியாகுமரி ஈத்தாமொழி சாலை பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான பிரதாப் குமார் (25) கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த ஜோனீஸ் பைக்கை வேகமாக ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். படுகாயம் அடைந்த மற்ற 2 பேரும் தனியார் மருத்துவமனையில் உள்ளனர்.

The post கன்னியாகுமரியில் கார் மீது பைக் மோதி நர்சிங் மாணவர் பலி: மேலும் 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: