சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை பணி தீவிரம்: வாகன ஓட்டிகள் கனவு நிறைவேறுவதால் மகிழ்ச்சி

 

திருத்தணி, ஆக. 28: திருத்தணியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ரூ.36 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் புறவழிச் சாலை பணியில், ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருத்தணி நகரத்தில் தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், கடந்த, 2008ம் ஆண்டு, ரூ.47 கோடி மதிப்பில், நெடுஞ்சாலை துறை சார்பில் புறவழிச் சாலை அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த, 2012ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தி வழங்கியதற்காக, நெடுஞ்சாலை துறையினர், ரூ.11 கோடி மாவட்ட வருவாய் துறையினருக்கு வழங்கியது.

இதனை தொடர்ந்து, 2013ம் ஆண்டு சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, அரக்கோணம் சாலைக்கு, 30மீ. அகலம், 3.24 கி.மீ., துாரத்திற்கு, ரூ.36 கோடி மதிப்பில், புறவழிச்சாலை அமைக்கும் பணி துவங்கி, கடந்த, 2019ல், திருத்தணி நெடுஞ்சாலை துறையினர், தார்ச் சாலை ஏற்படுத்தியது. மேலும், பட்டாபிராமபுரம் நந்தி ஆற்றின் குறுக்கே, ரூ.5 கோடி உயர்மட்ட பாலம், எம்ஜிஆர் நகர் அருகே, ரூ.10.50 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை துறையினர் ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் உயர்மட்ட பாலம் கடந்த, 2020ம் ஆண்டு கட்டப்பட்டது. இதை தொடர்ந்து, ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு, நெடுஞ்சாலை துறையினர், ரூ.16 கோடி ரயில்வே நிர்வாகத்திடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியது.

ஆனால், கடந்த ஆண்டு ரயில்வே நிர்வாகம் தண்டவாளத்தின் இருபுறமும் மூன்று தூண்கள் அமைத்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மேம்பாலம் அமைப்பதற்கு, 500 டன் எடை கொண்ட இரும்பால் செய்யப்பட்ட, ஐந்து கர்டர்கள் மற்றும் அதை பொருத்துவதற்கு தேவையான தடவாட பொருட்கள் அரக்கோணத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு கர்டரும், 150 அடிநீளம் கொண்டது. மேலும், மேம்பாலத்தின் மீது கர்டர்கள் வைப்பதற்கு கிரேனும் கொண்டு வரப்பட்டது. ரயில்வே நிர்வாகம் ஆகஸ்ட் மாதத்திற்குள் ரயில்வே மேம்பாலம் கட்டி முடித்து ஒப்படைக்கப்படும் என உறுதி அளித்திருந்தனர். ஆனால், பணிகள் துவங்காமல் இரு மாதமாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

இதையடுத்து ரயில்வே நிர்வாகம் தற்போது மேம்பாலம் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தியுள்ளன. இது குறித்து ரயில்வே துறை உதவி பொறியாளர் ஒருவர் கூறுகையில், திருத்தணி புறவழிச்சாலை, எம்ஜிஆர் நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் முதல் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு கிரேன், மூன்று பொக்லேன் இயந்திரங்கள், லாரிகள் என, 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் கர்டர்களை, ரயில்வே தண்டவாளத்தின் இருபுறமும் அமைக்கப்பட்ட தூண்கள் மேல் வைத்து மேம்பாலம் அமைக்கும் பணிகள் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடக்கிறது.

இப்பணிகளுக்காக அந்த நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ரயில் சேவையும் நிறுத்தப்படுகிறது. இப்பணிகள் அடுத்த மாதத்திற்குள் அனைத்து கர்டர்கள் பொருத்தி மேம்பாலத்திற்கு சாலை ஏற்படுத்தப்படும். பின், சாலை அமைப்பு நெடுஞ்சாலை துறையினர் இணைப்பு சாலை ஆகியவை நவம்பர் மாதம் இரண்டு வாரத்திற்குள் முடிக்கப்படும். அதன் பின் வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு புறவழிச்சாலை விடப்படும் என கூறினார்.

The post சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை பணி தீவிரம்: வாகன ஓட்டிகள் கனவு நிறைவேறுவதால் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: