ஓசூரில் எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு; வாய்ஸ் டிரான்ஸ்மீட்டர் பயன்படுத்தி தேர்வு எழுதிய வாலிபர் சிக்கினார்: உடந்தையாக இருந்த தங்கையிடம் கிடுக்கிப்பிடி

ஓசூர்: தமிழகம் முழுவதும் நேற்று, காவல்துறை சார்பில் எஸ்ஐ பணிக்கு தேர்வு நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதியமான் பொறியியல் கல்லூரி தேர்வு மையத்தின் அறையில், தேர்வர் ஒருவர் ஏதே பேசிக்கோண்டே தேர்வு எழுதுவதாகவும், இதனால் தங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் மற்றவர்கள் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், அந்த வாலிபரை அழைத்து விசாரணை செய்த போது, அவர் ஊத்தங்கரை அருகே அச்சூர் பகுதியை சேர்ந்த நவீன்(22) என்பதும், முககவசம் அணிந்து கொண்டு, காதில் ஏதோ கருவியை பொருத்தி இருந்ததையும் கண்டுபிடித்தனர். பரிசோதனை செய்த போது, மறுமுனையில் பெண் ஒருவர் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை அட்கோ போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை செய்ததில், அவரது தங்கை இந்திரலேகா (19) யூடியூப் பார்த்து, வாய்ஸ் மைக்ரோ போனை காதில் வைத்து, டிரான்ஸ்மீட்டர் கருவியை பயன்படுத்தி, நவீன் வினாத்தாளை பார்த்து சொல்ல, அவரது தங்கை இந்திரலேகா விடை சொல்லி, முறைகேடில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நவீன் மற்றும் அவரது தங்கை இந்திரலேகா மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிட் அடித்த எஸ்ஐ மனைவி வெளியேற்றம்
திருவண்ணாமலையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய பெண் ஒருவர் பிட் அடித்ததாக தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, திடீரென பாத்ரூம் செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் திரும்பி வர தாமதம் ஆகியுள்ளது. மேலும், கையோடு வினாத்தாளையும் அவர் பாத்ரூமுக்குள் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. மேலும், அவர் தேர்வு எழுதிய இருக்கையின் கீழ் சில துண்டு தாள்கள் இருந்ததாம். அதன் அடிப்படையில் தேர்வு அறை கண்காணிப்பாளர் அந்த பெண்ணை தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்காமல், மைய கண்காணிப்பாளரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, அவரை வெளியேற்றினர். அந்தப் பெண்ணின் கணவர், சென்னையில் எஸ்ஐ ஆக பணியாற்றுவதும், உறவினர் இன்ஸ்பெக்டராக இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post ஓசூரில் எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு; வாய்ஸ் டிரான்ஸ்மீட்டர் பயன்படுத்தி தேர்வு எழுதிய வாலிபர் சிக்கினார்: உடந்தையாக இருந்த தங்கையிடம் கிடுக்கிப்பிடி appeared first on Dinakaran.

Related Stories: