இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

கரூர், ஆக. 26: கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் என 3,359 பதவிகளுக்கு நேரடி பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 2023ம் ஆண்டு ஜூலை 1ம்தேதி அன்று 18 வயது நிரம்பியவராகவும், 26 வயதுக்கு மிகாமல் (பிசி, எம்பிசி, டிஎன்சி-28, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, டிஜி – 31, டிடபிள்யூ-37, எக்ஸ் சர்வீஸ்மேன் – 47) இருக்கும் ஆண், பெண் இருபாலரும் தகுதியானவர்கள். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் செப்டம்பர் 19ம்தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு, கரூர், வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சி மையத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய காற்றோட்டமான வகுப்பறை, சிறந்த பயிற்றுநர்களை கொண்ட இலவச பயிற்சி, ஸ்மார்ட் போர்டு வகுப்பறை வசதி, போட்டித் தேர்வுக்கான சமச்சீர் புத்தகங்கள், மாத இதழ்கள், நாளிதழ்களுடன் கூடிய நூலகம், பயிற்சி கையேடுகளுடன் இலவச பாடக்குறிப்புகள், இலவசமாக கணினி பயன்படுத்தும் வசதி, இலவச வைஃபை வசதி, உடற்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.

தொலைதூரத்தில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் அலுவலகத்துக்கு நேரில் வர இயலாதவர்கள் அரசுப் பணி தேர்வுகளுக்கான பயிற்சி பெற்று பயனடையும் வகையில் பயிற்சி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பாகும்.இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள கரூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வரவேண்டும். மேலும், விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04324-223555 என்ற அல்லது studycirclekarur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: