100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மோடி அரசு ரூ6,366 கோடி பாக்கி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தர வேண்டிய ரூ.6,366 கோடியை ஒன்றிய அரசு தரவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஒரு வருடத்தில் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதைய மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்த 2023-24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கான ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது. இது கடந்த நிதியாண்டை காட்டிலும் 21.6 சதவீதம் குறைவாகும்.

இந்நிலையில் 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தர வேண்டிய நிதியை அரசு கொடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன் டிவிட்டர் பதிவில், “கடந்த 2005ம் ஆண்டு இதேநாளில்(ஆக.23) மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் 14.42 கோடி பேர் உள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். கொரோனா தொற்று காலத்தில் வேலை வாய்ப்புகள் இல்லாதபோது கோடிக்கணக்கான மக்களின் 80 சதவீத வருமான இழப்பை ஈடு செய்தது.

தற்போது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2023-24 நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியில் மூன்றில் ஒரு பங்கு நிதியை அதாவது 33 சதவீதம் அளவுக்கு குறைத்து விட்டது. இருந்தபோதும் இந்த ஆண்டு 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.6,366 கோடி பணத்தை தராமல் ஒன்றிய அரசு பாக்கி வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

The post 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மோடி அரசு ரூ6,366 கோடி பாக்கி: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: