ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், கருங்குளத்தில் யூனியன் அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்காணல்

*விண்ணப்பதாரர்கள் குவிந்தனர்

ஓட்டப்பிடாரம் : ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், கருங்குளம் யூனியன் அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கான நேர்காணல் நடந்தது. இதில் விண்ணப்பதாரர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் இன சுழற்சி அடிப்படையில் காலியாக உள்ள 3 உதவியாளர்கள் மற்றும் ஒரு இரவு நேர காவலர் பணியிடங்களுக்கு தகுதி அடிப்படையில் நேரடி தேர்வு மூலம் பணி நியமனம் செய்யும் வகையில், கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு நேரடியாகவும் தபால் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மொத்தம் 614 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்நிலையில் உதவியாளர் பணிகளுக்கான நேர்காணல், நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. காலை 8 மணி முதல் விண்ணப்பதாரர்கள் குவிந்தனர். மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டிருந்ததால் ஜெனரேட்டர் உதவியுடன் நேர்காணலுக்கு வந்திருந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
பின்னர் சேர்மன் ரமேஷ், துணை சேர்மன் காசி விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் பிடிஓ சிவபாலன், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரி பார்த்தார். 300க்கும் மேற்பட்டோர் நேர்காணலில் பங்கேற்றனர். நாளை (24ம் தேதி) இரவு காவலருக்கான நேர்காணல் நடைபெறுகிறது.

திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் 2 அலுவலக உதவியாளர்கள் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ஆன்லைன் மூலமாக 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த பணிகளுக்கான நேர்காணல் நேற்று நடந்தது. காலை முதலே ஏராளமானவர்கள் நேர்காலுக்கு வரத்தொடங்கினர். யூனியன் சேர்மன் செல்வி வடமலைப்பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்டோ தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேர்காணல் செய்தனர். காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கு 300க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர், இளம்பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் காத்திருந்து நேர்காணலில் கலந்து கொண்டனர்.

ஆனால் நிர்வாகத்தின் சார்பில் நேர்காணலில் கலந்து கொண்டவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.இதேபோல் கருங்குளம் யூனியன் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல், நேற்று நடந்தது. யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், துணை சேர்மன் லட்சுமண பெருமாள், பிடிஓ முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.

யூனியன் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். நேர்காணலுக்கு கருங்குளம் வட்டார அளவில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர்.

குளறுபடி

திருச்செந்தூர் யூனியனில் காலியாக உள்ள 2 பணியிடங்களும் எஸ்சி, எம்பிசி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு தான் முன்னுரிமை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் கவனக்குறைவு, அலட்சியத்தால் அனைத்து சமுதாயத்தினருக்கும் நேர்காணல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து சமுதாயத்தினரும் நேர்காணலில் கலந்து கொண்டனர். ஓட்டப்பிடாரத்தில் யூனியனுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்கக் கூடிய நிலையில் விதிமுறைகள் தெரியாமல் சென்னை, தஞ்சை, சேலம், நாமக்கல் மற்றும் நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். இதுபற்றி கேட்டபோது விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்காணல் கடிதம் அனுப்பப்பட்டதுதான் காரணம் என தெரிய வந்தது.

The post ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், கருங்குளத்தில் யூனியன் அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்காணல் appeared first on Dinakaran.

Related Stories: