சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு முகத்தில் கரிபூசி, நெற்றியில் நாமத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தர்ணா

*நாகர்கோவிலில் பரபரப்பு

நாகர்கோவில் : தோவாளை தாலுகா ஈசாந்திமங்கலம் அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்மேகம். இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வருகை தந்தார். பின்னர் திடீரென்று தமது முகத்தில் கரியை பூசிய வண்ணம் நெற்றியில் நாமமிட்டு கலெக்டர் அலுவலக வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் சுடுகாட்டிற்கு பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டு கோஷங்கள் எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை பிடித்து அங்குள்ள புறக்காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறியதாவது:

ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா காலனி ஆதிதிராவிட நல துறையால் வழங்கப்பட்ட காலனி ஆகும். இங்கு தற்போது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு பொது சுடுகாடு இடுகாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு தம்பிரான் குளம் கரையில் கட்டி தரப்பட்டுள்ளது. ஆனால் இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல போதிய பாதை வசதி இல்லை.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி கொண்டு செல்ல வேண்டிய பரிதாப சூழ்நிலை உள்ளது. இதனால் ஊர் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறோம். எனவே சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்து தர வேண்டும் என பஞ்சாயத்து தலைவரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மாவட்ட நிர்வாகம் சுடுகாட்டிற்கு கான்கிரீட் பாதையை அமைக்க ஆவன செய்ய வேண்டும். நான் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனத் தலைவராக உள்ளேன் என்றார். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கார்மேகம் மீது நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு முகத்தில் கரிபூசி, நெற்றியில் நாமத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: