எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கான 2ம் கட்ட கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ், படிப்புக்கான 2ம் கட்ட கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. தமிழ்நாட்டில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு 2023-24 கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு அண்மையில் நிறைவடைந்தது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு, விளையாட்டு வீரா், முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை, கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற்றது.

பொதுப்பிரிவு கலந்தாய்வு இணைய வழியே நடைபெற்றது. முதல் சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு அரசு ஒதுக்கீட்டில் 119 எம்.பி.பி.எஸ்., 85 பி.டி.எஸ். இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டில் 648 எம்.பி.பி.எஸ், 818 பி.டி.எஸ். இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான 2ம் சுற்று கலந்தாய்வு இணைய வழியே இன்று தொடங்கப்படும் என்று மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் தோ்வுக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, இதற்கான 2ம் சுற்று கலந்தாய்வு இன்று காலை 10மணி அளவில் தொடங்கியது. இன்று காலை 10 மணி முதல் 22ம் தேதி மாலை 5 மணி வரை இணையத்தில் பதிவு செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் வரும் 24ம் தேதி காலை 10 மணி முதல் 28ம் தேதி மாலை 5 மணி வரை இடங்களைத் தோ்வு செய்யலாம்.

வரும் 29, 30 ஆகிய தேதிகளில் தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதைத் தொடர்ந்து வரும் 31ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பா் 1ம் தேதி முதல் 4ம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேருவதற்கான ஆணை இணையதளங்களில் வெளியிடப்படும். இதை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். செப்டம்பா் 4ம் தேதி மாலை 5 மணிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கககத்தின் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

The post எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கான 2ம் கட்ட கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: