காஞ்சிபுரம் 46வது வார்டில் ரூ.18 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை: எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி 46வது வார்டில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன்கடையை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 46வது வார்டு வசந்தம் நகர் பகுதியில் ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.18.5 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை, பார்க்கிங் வசதி, அதிநவீன சிசிடிவி கேமரா உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்மாதிரியான ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கலந்துகொண்டு, ரூ.18.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டு பகுதியில் தியாகி விஸ்வநாததாஸ் நகர் மற்றும் அண்ணாமலை நகர், கணேஷ் நகர், விவேகானந்தா நகர் உள்ளிட்ட 5 பகுதிகளில் ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றிகளை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர் சாந்தி சீனிவாசன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பணிக்குழு தலைவர் சுரேஷ், மலர்விழி சூசையப்பன் கார்த்திக், திமுக நிர்வாகிகள் தசரதன், சீனிவாசன், ஜெகநாதன், மலர்மன்னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரம் 46வது வார்டில் ரூ.18 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை: எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: