மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு ரூ.3.02 கோடியில் நினைவு மணிமண்டபம்

புதுக்கோட்டை, ஆக.17: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள் ரகுபதி, சாமிநாதன், மெய்யநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புதுக்கோட்டையில் 1861ம் ஆண்டு முதல் அரசு பொது அலுவலக வளாகத்தில், செயல்பட்டு வரும் அரசு கிளை அச்சகத்தின் மூலம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசிதழ்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் நிலைப்படுத்தப்பட்ட மற்றும் நிலைப்படுத்தப்படாத படிவங்கள் மற்றும் பதிவேடுகள் பல்கலைகழக விடைதாள்கள், தேர்வுத்துறை மற்றும் தேர்தல் துறை படிவங்கள், மருத்துவத்துறை, காவல்துறை, நிதிவிதித்தொகுப்பு மற்றும் கருவூலத்துறை ஆகிய துறைகளுக்குரிய படிவங்கள் மற்றும் பதிவேடுகள் இந்த அச்சகத்தின் மூலம் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை கிளை அச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் இங்கு நிறுவப்பட்டுள்ள புதிய அச்சு இயந்திரங்கள் குறித்தும், அச்சடிக்கப்பட்டுவரும் படிவங்கள், பதிவேடுகள் குறித்தும், இந்த அச்சகத்திற்கு அதிவிரைவாக அச்சிட தேவையான அதிநவீன அச்சு இயந்திரங்கள் குறித்தும், கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடம் குறித்தும், கட்டுமானப் பணி முன்னேற்றம் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். இதேபோல, தமிழகத்தில் 300 ஆண்டு பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-வது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமானுக்கு அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்பதற்காக, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

மேலும், ரூ.3.02 கோடியில் கலைநேர்த்தியுடன் மணி மண்டபத்தை சிறப்பான முறையில் மேற்கொள்ளவும், மன்னரின் வாழ்க்கை வரலாற்றை இக்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும், மன்னரால் பயன்படுத்தப்பட்ட பொருட்களை கொண்டும், போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கொண்டும் காண்போரை கவரும் வகையில் பணிகளை மிக நேர்த்தியாக மேற்கொள்ள பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அமைச்சர்களால் அறிவுறுத்தப்பட்டது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் திருவுருவச்சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் டாக்டர் செல்வராஜ், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) ராஜ்மோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) பாரதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு ரூ.3.02 கோடியில் நினைவு மணிமண்டபம் appeared first on Dinakaran.

Related Stories: