முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுகள் பெற்ற இளைஞர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சமூக சேவை மற்றும் பல்வேறுத் துறைகளில் சாதனை புரிகின்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதுகள் 15 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என இரண்டு பிரிவுகளில் தனித்தனியே வழங்கப்படுகிறது. இவ்விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று சென்னையில் நடைபெறுகின்ற சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது.

2023 – ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்காக எஸ்.தஸ்தகீர் (நீலகிரி), ஆர்.தினேஷ்குமார் (திருச்சி), கோ.கோபி (இராணிப்பேட்டை), மு.விஜயலட்சுமி (சென்னை), எஸ்.சந்திரலேகா (மதுரை), டி.கவிதா (காஞ்சிபுரம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு இன்று (15.08.2023) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விருதுக்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசாக தலா ரூபாய் 1 லட்சத்திற்க்கான காசோலையினை வழங்கி சிறப்பித்தார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த சிறந்த சாகச விளையாட்டு வீரருக்கான சிறப்பு விருது, பதக்கம் மற்றும் பரிசுத்தொகை ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையினை பி.ராஜசேகர் (செங்கல்பட்டு) அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கினார்.

இந்த விருதுகளை பெற்ற இளைஞர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இன்று (15.08.2023) சென்னை முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, ஆகியோர் உடன் இருந்தனர்.

The post முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுகள் பெற்ற இளைஞர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: