கடலில் அலைகள் வராததால் அலைச்சறுக்குப் போட்டி ஒருநாள் ரத்து

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள சர்வதேச அலைச்சறுக்குப் போட்டியின் துவக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோவளத்தில் நடந்தது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து, முதல் நாள் அலைச்சறுக்குப் போட்டி நேற்று காலை முதல் மாலை வரை மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெற இருந்தது.

இதற்காக, இந்தியா, இலங்கை, மடகாஸ்கர், சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 70 வீரர், வீராங்கனைகள் கடற்கரைக்கு வந்திருந்தனர். அப்போது, கடலில் போதிய அளவு அலைகள் எழும்பாததாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் இன்று (நேற்று) போட்டி ரத்து செய்யப்பட்டது. பின்னர் நாளை (இன்று) நடைபெறும் என அலைச்சறுக்கு கூட்டமைப்பினர் தெரிவித்தனர். ஆர்வமாக, வந்து அலைச்சறுக்கு பலகையில் சாகசம் செய்து பார்வையாளர்களை மகிழ்விக்க நினைத்த வீரர், வீராங்கனைகள் ஏமாற்றமடைந்து மீண்டும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

The post கடலில் அலைகள் வராததால் அலைச்சறுக்குப் போட்டி ஒருநாள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: