ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

*ஆடி அமாவாசை திருவிழா பொறுப்பு அதிகாரி நேரில் ஆய்வு

விகேபுரம் : நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது இந்த விழாவில் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் கோயிலில் தங்குவதற்கு 3 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து கோயிலில் தங்குவதற்கு கூடுதல் நாட்கள் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையேற்று 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை மட்டுமே அனுமதி வழங்கி கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் தனியார் வாகனங்களில் குடில் அமைப்பதற்காகவும், தங்களுக்கு தேவையான சாமான்களை கொண்டு செல்வதற்காகவும் தனியார் வாகனங்களை வனத்துறையினர் அனுமதித்தனர். ஆனால் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி தரவில்லை. இதனால், பாபநாசம் சோதனை சாவடியில் நேற்றுமுன்தினம் மாலை திடீரென மூடப்பட்டன. இதை தொடர்ந்து பக்தர்களிடம் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதை தொடர்ந்து நேற்று மாலை கோயிலுக்கு சென்ற பக்தர்கள் திருப்பி அனுப்பபட்டனர். இந்நிலையில் நேற்று முதல் (13ம் தேதி) முதல் 17ம் தேதி வரை 5 நாட்கள் தங்கி கொள்ளலாம். 17, 18ம் தேதிகளில் பக்தர்கள் முழுமையாக கீழே இறங்கி விட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மீண்டும் உத்தரவிட்டது.

இதையடுத்து காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் பக்தர்கள் குடில் அமைக்கும் பொருட்கள் எடுத்துச் செல்வதற்காக நேற்று காலை முதலே நூற்றுக்கணக்கான தனியார் வாகனங்கள் பாபநாசம் சோதனைச் சாவடியில் இருந்து டாணா வரை ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக அணிவகுத்து நின்றன. வனத்துறையினரின் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. பாபநாசம் சோதனை சாவடி கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் ஆனதால் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினருக்கு உதவும் பொருட்டு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், நகரச் செயலாளர் கணேசன், விகேபுரம் நகராட்சி சேர்மன் செல்வ சுரேஷ் பெருமாள், சிவந்திபுரம் ஊராட்சி தலைவர் ஜெகன், மாவட்ட கவுன்சிலர் தவசு பாண்டியன், அம்பை ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம், மாவட்ட கலை இலக்கிய செயலாளர் நெடுஞ்செழியன், வக்கீல்கள் அனீஸ், அன்பரசு, தொமுச பழனி உள்ளிட்ட பலர் தனியார் வாகனங்கள் விரைவாக செல்வதற்கு உதவி புரிந்தனர். இதனால், சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் விரைந்து சென்றன.

இதற்கிடையே பாபநாசம் வனச் சோதனை சாவடியில் ஆடி அமாவாசை திருவிழா பொறுப்பு அதிகாரி சிவ கிருஷ்ணமூர்த்தி, சப் கலெக்டர் முகமது சபீர் ஆலம், அம்பை தாசில்தார் சுமதி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து கோயில் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து அவர்கள் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அவற்றை சரி செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். நேற்று முதல் பக்தர்கள் குடில் அமைத்து தங்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று முதல் தனியார் வாகனங்கள் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை. மாறாக அகஸ்தியர்பட்டியில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து அரசு பஸ்களில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் அரசு துறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை இல்லை

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றைப் பொறுத்தவரை கெமிக்கல் சோப்பு, ஷாம்பு பயன்படுத்தாமல் ஆழமான பாறைகள் நிறைந்த பகுதிகளுக்கு போகாமல் எப்போதும் போல குளிக்கலாம். அதில் எந்த தடையும் இல்லை. அது குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: