திருப்பதி நடைபாதையில் சிறுமியை கவ்விச்சென்று கொன்ற சிறுத்தை: வனப்பகுதியில் சடலமாக மீட்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பெற்றோருடன் நடந்து சென்றபோது நடைபாதையில் சிறுமியை சிறுத்தை கவ்விச்சென்று கொன்ற சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கொவூரு மண்டலம் ேகாத்திரெட்டிபாலம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி சசிகலா. இவர்களது மகள் லட்ஷிதா(6). இவர்கள் 3 பேரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக மலைப்பாதை வழியாக சென்றனர். இரவு 7.30 மணியளவில் லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி எதிரே சென்றபோது லட்ஷிதா திடீரென மாயமானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்ஷிதாவை இரவு முழுவதும் தீவிரமாக தேடினர். நேற்று காலை வனப்பகுதியில் லட்ஷிதா காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் கர்னூல் மாவட்டம் அதோனி பகுதியை சேர்ந்த கோண்டா மற்றும் ஷிரிஷா தம்பதியின் மகன் கவுசிக்(4) ஆகியோர் நடைபாதை வழியாக பாதயாத்திரை சென்றபோது கவுசிக்கை சிறுத்தை கவ்வி சென்றது. பொதுமக்கள் விரட்டி சென்றதால் சிறுவனை, சிறுத்தை விட்டு சென்றது. இதையடுத்து கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கப்பட்டது. ஆனால் அது குட்டி சிறுத்தை என்பதால், அதன் தாய் சிறுத்தை நடமாட்டம் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. தற்போது சிறுமியை அந்த தாய் சிறுத்தை கவ்விச்சென்று கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுத்தையை பிடிக்க 2 இடங்களில் கூண்டு
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா நிருபர்களிடம் கூறுகையில், ‘திருப்பதி நடைபாதையில் குழந்தை மீது சிறுத்தை தாக்குதல் நடத்தப்பட்டது வருத்தமளிக்கிறது. நடைபாதையில் வனத்துறையினருடன் சேர்ந்து 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும். சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைக்கப்படும். திருமலைக்கு செல்ல ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி ஆகிய இரண்டு நடைபாதை உள்ளது. அதில் ஸ்ரீவாரி மெட்டு பாதையில் மாலை 6 மணி வரையும், அலிபிரியில் இரவு 10 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இனி இரண்டு நடைபாதையிலும் மாலை 6 மணி வரையே பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும்’ என்றார். இதற்கிடையே திருப்பதி மலை பாதையில் பலியான சிறுமியின் உடலை மருத்துவமனையில் பார்வையிட்ட மாவட்ட வன அலுவலர் சைதன்யகுமார் கூறுகையில், ‘சிறுமியின் உடலில் உள்ள காயங்களை பார்க்கும்போது, சிறுத்தை தாக்கியது போன்று தெரியவில்லை. கரடி தாக்கியது போன்ற காயங்கள் தலையில் உள்ளது’ என்றார்.

The post திருப்பதி நடைபாதையில் சிறுமியை கவ்விச்சென்று கொன்ற சிறுத்தை: வனப்பகுதியில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: