ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்தவர்களுக்கும் சிகிச்சை : சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

டெல்லி : ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்கள் சிஏஜி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. ஏழை, எளிய மக்களுக்காக ஒன்றிய அரசு கடந்த 2018ம் ஆண்டு தொடங்கிய ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து சிஏஜி தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை சிஏஜி அடங்கியுள்ளது. இதற்காக 2018 செப்டம்பர் முதல் 2021 மார்ச் வரையிலான காலக் கட்டத்தில் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 964 மருத்துவமனைகள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஒரே நேரத்தில் ஒருவரே பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு காப்பீடு கோரியது கண்டுபிடிக்கப்பட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக உயிரிழந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கோரி லட்சக்கணக்கானோர் காப்பீடு தொகை பெற்று இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு தேசிய சுகாதார மையம் முடக்கிய 11 லட்சம் காப்பீடு அட்டைகளுக்கும் மாநில சுகாதார அமைப்புகள் காப்பீடு தொகை விடுவித்தது அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதிக்கு பின்னர் 2.25 லட்சம் பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தேதி குறிப்பிட்டு காப்பீட்டு தொகை கோரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதே போல திட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னரே பல மருத்துவமனைகள் இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு தொகையை கோரி இருப்பதும் மாநில சுகாதார அமைப்புகளும் எந்த ஒரு விசாரணையும் இன்றி காப்பீட்டு தொகையை விடுவித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. காப்பீடு கோரும் முன்னரே மருத்துவமனைகளில் தொகை விடுவிக்கப்பட்டது, 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு சிறார்களுக்கான காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல திட்டத்திற்காக பதிவு செய்த தரவுகள் மற்றும் பயனாளிகளின் விவரங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் திட்டத்தில் இணைக்கப்பட்டதும் பதிவு செய்யப்பட்டதில் பாதிக்கும் மேல் மருத்துவமனைகள் உண்மையில் இல்லை என்பதும் சிஏஜி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்தவர்களுக்கும் சிகிச்சை : சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: