ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நியூசிலாந்து அணியில் இணையும் டிரென்ட் போல்ட்

வெலிங்டன்: நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார். நடப்பாண்டில் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படும் முனைப்பில் டிரென்ட் போல்ட் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய ஒப்பந்தத்தை டிரென்ட் போல்ட் நிராகரித்த போதிலும், இந்தியாவில் நடைபெறும் ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு சற்று முன்னதாக நியூசிலாந்தில் மீண்டும் இணைந்துள்ளார்.

நியூசிலாந்து அணி செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளதாவது; “ஒருநாள் உலகக் கோப்பையை நோக்கிச் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. அடுத்த இரண்டு மாதங்களில் சக வீரர்களுடன் இணைந்து சிறப்பாகச் செய்வேன் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.

மேலும் முதுகுவலி காயத்துக்காக சிகிச்சை பெற்று வந்த கைல் ஜேமிசனும் அணிக்குத் திரும்பியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

The post ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நியூசிலாந்து அணியில் இணையும் டிரென்ட் போல்ட் appeared first on Dinakaran.

Related Stories: